டான்சில் அறிகுறிகள் என்னென்ன? குழந்தைகளை அதிகம் பாதிக்குமா?
'டான்சில்' என்பது ஒரு நிணநீர்ச் சுரப்பி. அது, வாய்க்குள் மூன்று இடங்களில் உள்ளது. தொண்டையில் உள்நாக்குக்கு இருபுறமும் உள்ள, 'டான்சில்,' நாக்கு அடியில் உள்ள 'டான்சில்', மூக்குக்குப் பின்னால் உள்ள, 'டான்சில்' என, மூன்று வகைகள் உள்ளன.
தொண்டையில் சதை வீக்கமடைவதையே, 'டான்சில்' என்று தவறாக புரிந்து கொள்கின்றனர். 'டான்சில்' என்பது தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி.
உணவுகளின் மூலம் உட்புகும் கிருமிகள் சக்தி வாய்ந்தவையாக இருந்தால், முதலில், 'டான்சில்'கள் பாதிக்கப்படும்.
காய்ச்சல், சளி பிடிக்க துவங்கும் முன், தொண்டை வலிப்பது இந்த காரணத்தால் தான். ஒட்டுமொத்த, 'டான்சில்'களும் அந்த கிருமிகளோடு போராடும் போது, 'டான்சில்'கள் மொத்தமாக வீங்கிவிடும். இதைத்தான் 'டான்சிலைட்டிஸ்' என்பர்.
பீட்டா ஹீமோலைட்டிக் ஸ்ட்ரெப்டோகாகஸ், அடினோ வைரஸ், ப்ளூ வைரஸ், டிப்தீரியா, பாக்டீரியா' போன்ற கிருமிகளின் தாக்கத்தால் 'டான்சில்'கள் பாதிக்கப்படுகின்றன.
பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, 'டான்சிலைட்டிஸ்' பாதிப்பு அதிகம் வரும். அடிக்கடி சளி, காய்ச்சல், 'சைனஸ்' நோயால் அவதிப்படுவோர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர், ஊட்டச்சத்து குறைந்தோர், சுகாதாரமில்லாத பகுதியில் வசிப்போருக்கு 'டான்சிலைட்டிஸ்' ஏற்படும்.
'டான்சிலைட்டிஸ்' இரண்டு வகைப்படும். ஒன்று, திடீர் வீக்கம்; மற்றொன்று, நாள்பட்ட வீக்கம். முதல் வகையில், தொண்டை வலி, காய்ச்சல், தலைவலி, உடல்வலி, குமட்டல், வாந்தி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
'டான்சிலைட்டிஸ்' வீக்கத்திற்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து சரிபடுத்திவிடலாம். நாள்பட்ட, 'டான்சிலைட்டிஸ்'க்கு அறுவை சிகிச்சை தான் பலன் கொடுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.