குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் எப்படி கவனிப்பது?

உடல் உஷ்ணம் அதிகரிப்பது காய்ச்சல். சராசரியாக, உடல் உஷ்ணம், 98.6 டிகிரி பாரன்ஹீட் அல்லது 37 டிகிரி செல்ஷியஸ், என்ற அளவில் இருக்க வேண்டும். இந்த அளவு, சில நேரங்களில் மாறுபடலாம்.

காலை நேரங்களில், சற்று குறைவாகவும், மாலை வேளைகளில், சிறிது அதிகரிக்கவும் செய்யலாம்.

காய்ச்சல் என்பது நோயல்ல. உடலில் ஏதோ ஒரு பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது என்பதை காட்டுவதற்கான அறிகுறி. உதாரணமாக, வைரஸ், பாக்டீரியா தொற்று பாதித்தால், காய்ச்சல் வரும்.

பொதுவாக, ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைக்கு, காய்ச்சலுடன் வயிற்றுப் போக்கும் இருந்தால், உடனடியாக கவனிக்க வேண்டும்.

எந்த பிரச்னையும் இல்லாமல், 102 டிகிரி பாரன்ஹீட்டிற்கு குறைவாக காய்ச்சல் இருந்தால், சிகிச்சை தேவை இருக்காது.

வெது வெதுப்பான நீரில், பஞ்சை நனைத்து, நெற்றியில் ஒத்தடம் கொடுப்பது, தற்காலிக நிவாரணத்தை தரும்.

12 வாரங்கள் அல்லது அதற்கும் குறைவான வயது பச்சிளங் குழந்தைக்கு, 100.4 டிகிரி பாரன்ஹீட் அல்லது அதற்கும் கூடுதலாக காய்ச்சல் இருந்தால், உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.

காய்ச்சல் இருக்கும் சமயத்தில், உடலின் நீர்ச்சத்து வெகுவாக குறையலாம். எனவே, தண்ணீர், காய்கறி சூப், கஞ்சி போன்ற திரவ ஆகாரங்களை அடிக்கடி தர வேண்டும்.