ஹீமோகுளோபின் அளவை கவனிப்பது அவசியமா?
உடலில் உள்ள ரத்த சிவப்பு அணுக்களில் இருக்கும் இரும்புச்சத்து நிறைந்த புரதமே ஹீமோகுளோபின் என்று அழைக்கப்படுகிறது.
ஆண்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின், 14-18 கிராம் அளவிலும், பெண்களுக்கு, 12-16 கிராம் அளவிலும் இருக்க வேண்டும்.
8 கிராமுக்கு கீழே குறையும்போது, ரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு, சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.
ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவுக்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை, மூச்சிரைப்பு, உடல் வலி, தலைவலி போன்ற பல பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது, ரத்தம் நல்ல சிகப்பு நிறமாக, அடர்த்தியாக இருக்கும் . மேலும் நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை உடல் முழுக்க எடுத்து செல்ல உதவுகிறது. இதனால் தான் உடல் உறுப்புகள் அனைத்துமே சுறுசுறுப்பாக சீராக இயங்கும்.
பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை, கார்பன்டை ஆக்ஸைடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றி, உடலுக்கு சக்தியூட்டுகிறது.
ஹீமோகுளோபின் சீராக இருக்க நாள் ஒன்றுக்கு குறைந்தது 9 .மி.கிராம் அளவில் இரும்புசத்து தேவை. ஆரோக்கியமான உணவுகள் மூலமே நமக்கு தேவையான இரும்புச்சத்தை பெறுவது மிகவும் நல்லது.