தவறான வளர்ப்பு குழந்தை மனநலனை பாதிக்கும்
குழந்தை பருவத்தில் ஏற்படும் மனக்காயங்கள், அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடர்கின்றன.
குழந்தை பருவத்து அனுபவங்களும், தாயின் மனநிலையும் ஒருவரது வாழ்நாள் நடத்தையை தீர்மானிக்கும் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.
கர்ப்ப காலத்தில் தாய் சந்திக்கும் தொடர் எதிர்மறை எண்ணங்கள், குடும்ப சண்டைகள், மன அழுத்தம் ஆகியன, அவரது உடலில் 'கார்டிசோல்' எனும் மன அழுத்த ஹார்மோனை அதிகரிக்கின்றன.
அதேசமயம், மகிழ்ச்சியையும், மன அமைதியையும் தரும் 'டோபமைன்', 'செரட்டோனின்' போன்றவற்றை குறைக்கின்றன.
இந்த வேதியியல் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியையும், அதன் எதிர்கால மன உணர்வுகளையும் ஆழமாக பாதிக்கின்றன.
ஒரு குழந்தைக்கு தேவைப்படுவது பாதுகாப்பும், நிபந்தனையற்ற அன்பும் மட்டுமே.
குடும்ப வன்முறை, பாலியல் மற்றும் உடல் ரீதியான அத்துமீறல்கள் அல்லது கடுமையான புறக்கணிப்பு போன்ற சூழல்கள், ஆழமான உளவியல் காயங்களை ஏற்படுத்துகின்றன.
குடும்ப சண்டைகள், பாதுகாப்பற்ற சூழலில் வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் பதட்டம், துாக்கமின்மை மற்றும் கோப கட்டுப்பாடின்மையால் தவிக்க நேரிடலாம்.
மன அழுத்தம், பயம் அல்லது மனச்சோர்வு ஏற்படும்போது தயங்காமல் உடனடியாக மனநல மருத்துவரை அணுகுவது அவசியம்.
பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருந்தால் தவறாமல் மருந்து உட்கொள்ள வேண்டும். சீரான இடைவெளியில் மருத்துவ பரிசோதனைகளை செய்தால் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.
குழந்தைகளுடன் தினமும் குறைந்தது 10 - 15 நிமிடங்கள் மனம் விட்டு பேசி, அவர்களது உணர்வுகளுக்கு பெற்றோர் மதிப்பளிக்க வேண்டும்.
இதன் வாயிலாக எத்தகைய மனக்காயங்களிலிருந்தும் முழுமையாக விடுபட்டு, அவர்களால் எதிர்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபட்டால் 'டோபமைன்', 'செரட்டோனின்' அளவு இயற்கையாகவே உயரும்; மன பிரச்னைகள் மறைந்துவிடும்.