குழந்தையின்மையா? தம்பதியாக பரிசோதனைக்கு செல்வது அவசியம்!

'இன்பெர்ட்டிலிட்டி' எனும் குழந்தையின்மை, இருபாலரையும் பாதித்தாலும், பெரும்பாலும் பெண்களிடம் மட்டுமே பிரச்னை உள்ளதாக நம்பப்படுகிறது.

உண்மையில், 40 % ஆண்கள், குழந்தையின்மை பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்; சமீப ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், 4 கோடிக்கு மேல் உயிரணு உற்பத்தி இருப்பதே இயல்பான நிலை என்றிருந்தது; தற்போது, 2 கோடி இருந்தாலே போதுமெனும் அளவுக்கு குறைந்து விட்டது.

நகரமயமாக்கல், ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், உடல் உழைப்பின்மை, மன அழுத்தம், புகைப்பிடித்தல், துாக்கமின்மை என இதற்கு பல காரணிகள் உள்ளன.

நீர், காற்று மாசு, கலப்பட உணவுகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், தொழிற்சாலை கழிவுகளின் அபாயங்கள், சுற்றுச்சூழல் மாசு ஆகியவை, ஆண்களின் மலட்டுத்தன்மையை மேலும் அதிகரிக்கின்றன.

நீண்ட நேரம் கணினியில் வேலை செய்வதால், மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் மறுக்க முடியாத ஒன்று.

வெளிக்காரணிகள், உடல் ரீதியிலான பிரச்னைகளைத் தாண்டி, குழந்தையின்மைக்கு தாங்களும் காரணமாக இருக்கலாம் என்பதை நம்பி, ஏற்றுக் கொள்ள ஆண்கள் மறுக்கின்றனர்.

திருமணமாகி சில ஆண்டுகள் குழந்தை இல்லையென்றால், பெண்கள் மட்டுமே மருத்துவ ஆலோசனைக்கு செல்கின்றனர். பல நேரங்களில் பெண்கள் தனியாகவே செல்வர்.

ஆலோசனைக்கு வரும் பெண்களுக்கு, பலவித பிரச்னைகளுக்காக பரிசோதனைகள் செய்தும், உணவுப் பழக்கத்தில் மாற்றம், உடற்பயிற்சி போன்றவைக்கு பின்னும், கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும்.

அப்போது, அவருடைய துணையை அழைத்து பரிசோதித்தால், உயிரணுவில் குறைபாடு இருக்கும். எனவே, ஆண்களுக்கு உயிரணு பரிசோதனை மட்டும் தான் செய்ய வேண்டும்.

முதல் பரிசோதனையில் ஏதாவது குறை இருந்தால், அதுவே இறுதி முடிவும் கிடையாது. காய்ச்சல், மன அழுத்தம், உறக்கமின்மை, சிகரெட் பழக்கம் என பல காரணிகள் உயிரணுக்களின் அளவை மாற்றும்.

கரு உருவாக, ஒரு கருமுட்டைக்கு, லட்சக்கணக்கில் ஆரோக்கியமான உயிரணுக்கள் அவசியம்.

எனவே, ஆரோக்கியமான வாழ்வியல் முறையை நான்கு வாரங்கள் பின்பற்றிய பின், மீண்டும் பரிசோதனை செய்து முடிவு செய்வது தான் சரியானது.

குழந்தையின்மை பிரச்னை யாரிடம் இருந்தாலும், தம்பதியாக சேர்ந்து ஆலோசனைக்கு வரும் போது, தீர்வு எளிதாகும்.