இலுப்பை மரம் குறித்த சில தகவல்கள்...

இலுப்பையின் தாயகம் தமிழகம். நேபாளம், இலங்கை மற்றும் மியான்மரிலும் காணப்படுகிறது.

நம் நாட்டில், ஜார்கண்ட், குஜராத், மத்திய பிரதேசம், பீஹார், ஒரிசா, கேரளம் மாநிலங்களிலும் வளர்கிறது. இது, சப்போட்டா மர வகையை சார்ந்தது.

தமிழகத்தில், கடந்த, 1950ம் ஆண்டில், 30 ஆயிரம் மரங்களுக்கும் அதிகமாக இருந்தன. ஆனால், 2015ம் ஆண்டு கணக்கின்படி, 10 ஆயிரம் மரங்களுக்கும் குறைவாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இலுப்பை ஒரு வெப்ப மண்டல தாவரம். வறண்ட நிலங்களிலும் எளிதாக வளரக்கூடியது. இலுப்பையின் ஆயுட்காலம், 400 ஆண்டுகளுக்கு மேல். 60 அடிக்கும் மேல் வளரக்கூடியது.

இதன் இலை, பூ, விதை பட்டை, எண்ணெய், புண்ணாக்கு ஆகிய அனைத்தும் சங்க காலம் தொட்டு இன்று வரையிலும் மருத்துவத்திற்கான பயன்பாட்டில் உள்ளது.

இதன் பருவகாலம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை. முளைத்த நாளிலிருந்து, 10 ஆண்டுகளுக்கு பின்னர்தான் பலன் தரும்.

ஒரு ஆண்டுக்கு, 200 கிலோவிலிருந்து, 300 கிலோ பூவும், 20 முதல் 200 கிலோ வரை இலுப்பை விதையும் கிடைக்கும். ஒரு கிலோ விதையிலிருந்து முன்னூறு மில்லி லிட்டர் எண்ணெய் எடுக்கலாம்.