பாலுக்கு மாற்றாக கேழ்வரகு இருக்குமா?

பால் அலர்ஜி மற்றும் வீகன் டயட் பின்பற்றுவோருக்கு கால்சியம் சத்துக்காக, பாலுக்கு மாற்றாக கேழ்வரகு சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.

மால்ட் வடிவில் ஒரு டேபிள் ஸ்பூன், 15 கிராம் பாலில் கலந்து தான் குடிக்கிறோம். இதில், வெறும் 40 மி.கிராம் கால்சியம் மட்டுமே உள்ளது. 100 கிராம் முழு கேழ்வரகை நம்மால் சாப்பிட முடியாது.

தோசை, களி, புட்டு என்று வேறு எந்த வடிவில் எடுத்தாலும், நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குறைவான அளவு கேழ்வரகு சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடும்.

அன்றாட கால்சியம் தேவை என்பது வயதிற்கு ஏற்ப மாறுபடும். ஒரு வயதில் 500 மி.கிராமில் ஆரம்பித்து, வயது ஏற ஏற 1,000 மி.கிராம் வரை தேவைப்படும்.

இளம் வயதினருக்கு 800 மி.கிராம், பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு 1,000 மி.கி., என்று மாறுபடும். 100 மில்லி பாலில், 340 மி.கிராம் கால்சியம் உள்ளது.

தினசரி 300 மில்லி பால் தந்தாலும் குழந்தைகள், முதியவர்களால் சுலபமாக குடிக்க முடியும். இதுதவிர, தயிர், பனீர் என்று எந்த பால் பொருளானாலும் இதே அளவு கால்சியம் உள்ளது.

கால்சியம் கிடைக்க சுலபமான வழி பால், பால் பொருட்கள். இதற்கு கேழ்வரகை எந்த விதத்திலும் ஒப்பிட முடியாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏன் கால்சியம் குறைபாடு வருகிறது என்றால், கால்சியம் என்ற தாதுப்பொருளை முழுமையாக உடல் உறிஞ்சுவதற்கு, கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் டி சத்து அவசியம்.