ஏ.ஐ., அதிகம் நம்புவது மூளைக்கு ஆபத்தா?

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) நம் தினசரி வாழ்க்கையில், தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளது.

கேள்விகளுக்குப் பதிலளிப்பது, மின்னஞ்சல் எழுதுவது, ஆவணங்களை சுருக்குவது முதல் கால அட்டவணைகளை திட்டமிடுவது வரை, நாம் வேலை செய்யும், கற்கும் முறையை மாற்றி தருகிறது.

ஆனால், ஏ.ஐ.,- அதிகம் சார்ந்திருப்பது நினைவாற்றலையும், சிந்திக்கும் திறனையும் பாதிக்குமா? என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.

இது, தகவல்களை நினைவில் கொள்ளவும், சூழ்நிலைகளைப் பகுப்பாய்வு செய்யவும், சிக்கல்களைத் தீர்க்கவும், ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்கவும் நாம் செலவிடும் மன உழைப்பை குறைக்கும்.

தினமும் நாம் யோசிக்கும்போது தான் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். அனைத்துக்கும் ஏ.ஐ.,-ஐ மட்டுமே நம்பியிருந்தால், சுயமாக யோசிக்கும் திறன், தன்னம்பிக்கை நாளடைவில் குறைந்துவிடும்.

எதையும் நாம் மூளையில் நினைவில் வைத்துக்கொள்ளாமல், மொபைல் அல்லது ஏ.ஐ.,-யிடம் ஒப்படைத்துவிட்டு நாம் சும்மா இருப்பதே 'காக்னடிவ் ஆப்லோடிங்' என்கிறார்கள் நிபுணர்கள்.

இது மன சுமையை குறைத்து வேலையை எளிதாக்கினாலும், நினைவுகூர்தல், கவனம் செலுத்துதல், சுயமாக சிக்கல்களை தீர்த்தல் ஆகிய திறன்களை படிப்படியாக பலவீனப்படுத்தக்கூடும்.

மாணவர்கள் ஏ.ஐ., உதவி மூலம் வீட்டுப்பாடத்தை முடித்தால், தேர்வின்போது சொந்தமாக எழுதுவதில் சிரமத்தை சந்திப்பார்கள்.

அதேபோல், வேலைக்குச் செல்பவர்கள் ஏ.ஐ., கொடுக்கும் தகவலை அப்படியே நம்பினால், அதிலுள்ள தவறுகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போகும்.

ஏ.ஐ., தரும் தகவல்கள் எப்போதும் 100 சதவீதம் சரியானவை அல்ல. சில நேரங்களில் முழுமையற்ற, காலாவதியான அல்லது தவறான பதில்களை உருவாக்கக்கூடும்.

எனவே, ஏ.ஐ., ஆதிக்கம் செலுத்தும் உலகில், அது கொடுப்பதை அப்படியே நம்பாமல், இது சரியா? என யோசித்து சுயமான முடிவெடுக்கும் திறனை வளர்ப்பது அவசியமாகும்.