ஜல்லிக்கட்டு... தமிழர்களின் வீர விளையாட்டு இது !
ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடக்கிறது.
ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.
சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங்கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்திலிருந்த சல்லிக் காசு எனும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடுவர். மாட்டை அடக்கும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும்.
இந்தப் பழக்கம் பிற்காலத்தில் சல்லிக்கட்டு என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து ஜல்லிக்கட்டு என மருவியதாக கூறப்படுகிறது.
பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரிகத்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழா போல் கொண்டாடப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் போன்ற இடங்களிலும், சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறையிலும் ஜல்லிக்கட்டு நடக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. திருச்சி, தேனி போன்ற தென் மாவட்டங்களிலும் ஆங்காங்கே நடக்கிறது.
உலகளவில் சிறப்பு வாய்ந்தஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டவர் உட்பட பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் அலங்காநல்லூரில் குவிவர்.