முகலாயர்களால் சிதைக்கப்பட்ட ஆடம்பர நகரம்.. இன்று பிரபல சுற்றுலாத் தலம்...!
யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்று ஹம்பி நகரம். கர்நாடகாவின் துங்கபத்ரா நதிக் கரையில் அமைந்துள்ளது இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம்.
பல்வேறு புராதன கோவில்கள் மற்றும் சிற்பங்கள் நிறைந்த இந்த நகரம் தமிழக சுற்றுலாப் பயணிகளின் ஆதர்ச தலமாக விளங்குகிறது. ராமாயணத்தில் ஹம்பி நகரம் பற்றிய குறிப்பு உள்ளது.
விஜயநகர பேரரசின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் 1600 சின்னங்கள் இங்கு உள்ளன. இதில் பிரம்மாண்ட கோபுரங்கள், சிற்ப வேலைபாடுகள், கோவில்களும் அடங்கும்.
15 ஆம் நூற்றாண்டில் சீனாவின் பெய்ஜிங் நகரை அடுத்து ஆசிய கண்டத்திலேயே ஆடம்பரமான நகராக விளங்கியது ஹம்பிதான். இங்கு அப்போது பெர்சியர்கள் பலர் வணிகம் செய்துள்ளனர்.
1565 ஆம் ஆண்டு இந்தியாவுக்குள் புகுந்த இஸ்லாமிய சுல்தான் மன்னர்கள் விஜயநகர பேரரசை வீழ்த்தி, ஹம்பி நகரை சிதைத்தனர்.
ஆனாலும் இன்று பல நினைவுச் சின்னங்கள் அழியாமல் உள்ளது. அந்தகால கட்டடக் கலையின் மேதமையை உலகுக்குப் பறைசாற்றுகிறதென்றால் அது மிகையில்லை.
விருபக்ஷா கோவில், விஜய விட்டலா கோவில், லோட்டஸ் மஹால், ஹனுமன் கோவில், சிரிக்கும் புத்தர் கோவில், ஹம்பி மார்கெட் என பல இடங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவருபவை.
20 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் தமிழகத்தில் இருந்து குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ஏற்ற தலம் ஹம்பி.