கேதார்நாத் யாத்திரை... பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!
உத்தராகண்ட் மாநிலத்தில் 'சார்தாம்' என்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 புண்ணிய தலங்களுக்கு செல்வது ஹிந்துக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இமயமலையில் அமைந்துள்ள இந்த கோவில்களுக்கு டிரெக்கிங் செய்து
செல்வது வாழ்வில் இதுவரை காணாத ஒரு புதிய மற்றும் வித்தியாசமான அனுபவம்,
உற்சாகத்தை தரும்.
ருத்ரபிரயாக் மாவட்டத்தில், கடல்
மட்டத்திலிருந்து 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோவிலுக்கு
பயணம் மேற்கொள்வோர், சில முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
மொத்தம் 16 கி.மீ., துாரத்துக்கு மலையேறி செல்ல வேண்டும் என்பதால், அதற்கேற்ப உடற்தகுதி உள்ளதா என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும்.
தற்போது ஹெலிகாப்டர் வசதி இருப்பினும், ஜூன் இறுதிவரை முன்பதிவு முடிந்துவிட்டதால், போலி விளம்பரங்கள், சமூக வலைதளங்களை பார்த்து ஏமாற வேண்டாமென, போலீசார் எச்சரிக்கின்றனர்.
டிரெக்கிங்
செல்ல சாதாரணமாக 7 முதல் 10 மணி நேரமாகும். இங்கு கடுமையான வெயில், மழை
அல்லது குளிர் இருக்கலாம்; இதற்கேற்ப, தேவையான உடைகள் உள்ளிட்டவற்றை
வைத்திருக்க வேண்டும்.
யாத்திரை மேற்கொள்வதற்கு சில
மாதங்களுக்கு முன்பிருந்தே, தினமும் நடைபயிற்சி செய்து வந்தால்,
மலையேறும்போது சிரமம் சற்று குறைவாக இருக்கும்.
மிகவும் உயரமான இடத்தில் இருப்பதால், இங்கு ஆக்சிஜன் அளவு சற்று குறைவாக இருக்கும் என்பதால், இரவு நேரத்தில், தங்குவதை தவிர்க்க வேண்டுமென்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.
வயதானவர்கள், யாத்திரைக்கு முன், முழு உடல் பரிசோதனை
செய்வது சிறந்தது. குறிப்பாக இதய நோய், சுவாச பிரச்னை உள்ளவர்கள், தேவையான
மருந்துகளை கையில் வைத்திருக்க வேண்டும்.
மலையேறுவதில் சிரமம்
இருப்பவர்களுக்கு, உயரம் குறைவான குதிரைகள் மற்றும் கோவேறு கழுதைகள்
சேவையை பயன்படுத்தும் போது, 4 - 5 மணி நேரத்தில் மலைக்கு சென்று விட
முடியும்.
முதல் முறை, குதிரையில் பயணிப்பவர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தாலும், உடல் சோர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.