முன்னணி பல்லுயிர் புகலிடமாகும் கேரளா
இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம், 2024ம் ஆண்டில், 683 புதிய விலங்கு இனங்கள், துணை இனங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளது.
இது, ஒற்றை ஆண்டில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை. இவற்றுள், 101 புதிய கண்டுபிடிப்புகள் கேரளாவில் இருந்தே கிடைத்துள்ளன.
குறிப்பாக, 80 விலங்கினங்கள் முற்றிலும் புதியவை. மீதி 21 உயிரினங்கள், முதன்முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்டவை. இதில், மற்ற மாநிலங்களை கேரளா விஞ்சியுள்ளது.
கேரளாவில் பல்லுயிர் பெருக்கம், அந்த மாநிலத்தின் தனித்துவமுள்ள புவியியல் அமைப்புக்கு சான்று.
அடர்ந்த மழைக்காடுகள், மலைச்சோலைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் கடலோர சதுப்பு நிலங்கள், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையின் இருப்பிடம் ஆகியவை இதற்கு காரணம்.
மேற்கு தொடர்ச்சி மலை, உலகின் எட்டு முக்கிய பல்லுயிர் மையங்களில் ஒன்றாகும்.
ஒரு புதிய வண்ணத்துப்பூச்சி இனம், அரிய தட்டான்பூச்சி போன்றவை கேரள வனங்களில் கிடைத்துள்ளன.
இவை, அங்கு இன்னும் ஆராயப்படாத வன வாழ்விடங்களில் மேலும் பல உயிர்களை கண்டுபிடிக்க வாய்ப்பு இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.