போர்க்களத்துக்கு போகலாம்... இனி ஜாலி டூர் !
மலை பிரதேசங்கள், கடற்கரை நகரங்கள், பழமையான கோவில்கள் அடங்கிய ஊர்களுக்கு மட்டும் தான் சுற்றுலா செல்ல வேண்டுமா என்ன?
நம் நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போர்கள் நடந்த யுத்த பூமிக்கு சுற்றுலா வாருங்கள் என அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதற்காகவே, 'பாரத் ரன்பூமி தர்ஷன்' என்ற 'மொபைல் போன்' செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எந்தெந்த மாநிலங்களிலுள்ள போர்க்களங்களுக்கு சுற்றுலா செல்லலாம்; அதன் வரலாற்று சிறப்பு என்ன; எப்படி செல்வது? எவ்வாறு அனுமதி பெறுவது போன்ற விபரங்கள் அதில் அடங்கியுள்ளன.
நாட்டின் உயரிய போர்க்களமான சியாச்சின் சிகரம், 2020ல் இந்திய - சீன படையினர் மோதிக்கொண்ட கல்வான் பள்ளத்தாக்குக்கு செல்லலாம்.
1971ல் இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்த லாங்கேவாலா, கார்கில் உள்ளிட்ட யுத்த பூமிகளுக்கு இனி சுற்றுலாச் சென்று பார்த்து வர முடியும்.
இதுதவிர அருணாச்சல பிரதேசத்திலுள்ள கிபிதுா மற்றும் பம்லா, லடாக்கிலுள்ள ரேஸங்லா மற்றும் பாங்காங் ஸோ, சிக்கிமிலுள்ள சோ லா உள்ளிட்ட போர்க்களங்கள் குறித்த தகவல்களும் செயலியில் உள்ளன.
உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, மக்களிடம் தேச பக்தியை வளர்ப்பது, ராணுவத்தின் உண்மையான வரலாற்றை மக்களிடம் எடுத்து செல்வதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.