உலகின் மாசுபட்ட நாடுகள் பட்டியல்... இந்தியாவுக்கு 5வது இடம்

சுவிட்சர்லாந்து நாட்டின் காற்று தரம் குறித்த தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் உலக காற்று தர அறிக்கை 2024 வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, உலகின் 17 % நகரங்கள் மட்டுமே, உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த தரமான காற்றினை கொண்டதாக உள்ளன.

அதில், ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து, நியூசிலாந்து உட்பட 7 நாடுகள் மட்டுமே உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த பி.எம்.,2.5 மாசு அளவீடு கட்டுக்குள் உள்ள நாடுகளாகும்.

உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5 நாடுகளாக சாட், வங்கதேசம், பாகிஸ்தான், காங்கோ, இந்தியா ஆகியவை உள்ளன.

அதேபோல் உலகின் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் புதுடில்லி முதலிடம் பிடித்துள்ளது. உலகின் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளன.

கடந்த 2023ம் ஆண்டு மாசுபட்ட நாடுகள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த இந்தியா, 2024ல் 5வது இடத்துக்கு வந்துவிட்டது.

இந்தியாவில், குறிப்பாக நகரங்களில், காற்று மாசுபாடு ஒரு பெரிய சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதார பிரச்னையாக உள்ளது.

இதற்கு வாகன மாசுபாடு, தொழில்துறை மாசுபாடு, கட்டுமான தூசி, பயிர் எரிப்பு மற்றும் சமையலுக்கு உயிர்மம் பயன்படுத்துதல் போன்றவை முக்கிய காரணிகளாகும்.

அமேசான் காடுகளில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, தென் அமெரிக்க நாடுகளில் காற்று மாசு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.