சூரிய ஒளியை பார்ப்பதால் பார்வை கூர்மையாகும்

மயோபியா எனும் கிட்டப் பார்வை கோளாறு, குழந்தைகளிடையே கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் அளவுக்கதிகமான ஸ்மார்ட் போன், லேப்-டாப், டேப்' போன்ற மின்னணு சாதனங்களின் பயன்பாடு. இவை தவிர, குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதில்லை.

போதிய இடைவெளி இல்லாமல், கண்களுக்கு மிக அருகில் வைத்து மின் திரைகளை பார்ப்பது, கண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி, கிட்டப் பார்வை பிரச்னையை அதிகரிக்கும்.

இதனால், தினமும் குறைந்தபட்சம் 2 மணி நேரம் குழந்தைகளை சூரிய ஒளியில் குழந்தைகளை விளையாட விட வேண்டுமென டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

காரணம், குழந்தைகளின் ஆரோக்கியமான கண் வளர்ச்சிக்கு, சூரிய வெளிச்சம் முக்கிய பங்கு வகிப்பதை, மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

ரெடினா எனும் விழித்திரையிலுள்ள பிரத்யேக செல்கள், பார்வையை கூர்மையாக்க உதவும், 'டோபமைன் ஹார்மோன்' உற்பத்தியை துாண்டுகிறது.

கிட்டப் பார்வைக்கு காரணமான கருவிழியின் அதிகப்படியான வளர்ச்சியை தடுக்க உதவும்.

காலை, மாலையில் சைக்கிள் ஓட்டுவது, திறந்த வெளி, பள்ளி மைதானத்தில் விளையாடுவது, நடப்பது என தினசரி குழந்தைகளை பழக்குவது, பாதிப்பை தடுக்க உதவும்.

குழந்தை பருவத்தில் ஏற்படும் கிட்டப் பார்வை குறைபாடு ஆபத்தானது. காரணம், மிகச் சிறிய வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

கண்களின் 'பவர்' வேகமாக அதிகரிக்கும் வாய்ப்புடன், முறையாக சிகிச்சை இல்லாவிட்டால், தீவிர கிட்டப் பார்வை குறைபாட்டுக்கு வழி வகுக்கும்.

இது, விழித்திரை விலகல், கண் அழுத்தம், கண் புரை போன்ற கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

எனவே, வெளியில் தினமும் விளையாடுவது, புத்தகத்தை சரியான தூரத்தில் வைத்து படிப்பது, குறைந்த போன் பயன்பாடு, ஆண்டுதோறும் கண் பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ளவும்.