மன அழுத்தத்தை குறைக்க கொஞ்சம் மார்னிங் பேஜஸ் முயற்சிக்கலாமா?

அதென்ன மார்னிங் பேஜஸ்? என யோசிக்கிறீர்களா? கிட்டத்தட்ட தினமும் டைரி எழுதுவதை போன்றுதான் இதுவும். ஆனால், முற்றிலும் மாறுபடுகிறது.

டைரியில் எழுதுவது என்பது நம்மை அறியவும், வெளிப்படுத்தவும் உதவுகிறது. ஒருவரின் வாழ்க்கையைப் பதிவு செய்வதற்கும், நினைவுகளை பாதுகாப்பதற்கும் உதவும் பழக்கமாகும்.

ஆனால், மார்னிங் பேஜஸ் என்பது உங்களின் மனதில் தோன்றக்கூடிய எண்ணங்கள் அனைத்தையும், அப்படியே எழுதுவதாகும். மற்றவர்களுடன் கட்டாயமாக இதை பகிரக்கூடாது.

ஒரு லாங்க் சைஸ் நோட்டை எடுத்துக்கொண்டு உங்கள் மனதில் தோன்றுவதை அப்படியே மூன்று பக்கங்களுக்கு மட்டும் எழுத வேண்டும்.

மனதிலுள்ள அனைத்தையும்... சோகம், சந்தோஷம், கோபம் குறை உட்பட அனைத்தையும், அப்படியே எழுத வேண்டும். முக்கியமாக, எதையும் சென்சார் செய்யக்கூடாது; இடையில் நிறுத்தவும் கூடாது.

நோட்டில் பேனாவை வைத்தவுடனே மனதில் உள்ளதை, தோன்றுவதை அப்படியே எழுதவும். தினமும் 3 பக்கங்கள் அல்லது அரை மணி நேரமாவது இருக்க வேண்டும். தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு எழுத வேண்டும்.

அப்போது, மூளையிலுள்ள அனைத்து குப்பையான எண்ணங்களும் நம்மை அறியாமலேயே நோட்டில் எழுத்துக்களாக கொட்டப்படுவதால், மனம் அமைதியடையக்கூடும்.

குறிப்பிட்ட பிரச்னைகள் மனதில் இருந்து வெளிப்படும் போது, நாளடைவில் சாதாரண ஒன்றாகத் தெரியக்கூடும். நெகட்டிவ் ஆன எண்ணங்களை தவிர்த்து, பாசிட்டிவ் ஆக யோசிக்கத் துவங்குவீர்கள்.

இதனால், தன்னிச்சையாக புத்துணர்ச்சியும், புதுமையான எண்ணங்களும் வர வாய்ப்புள்ளது.

கவலைகள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் கேள்விகள் குறித்த எண்ணங்களுடன் நீங்கள் இருக்கும்போது, மார்னிங் பேஜஸ் பழக்கத்தால், மனம் தெளிவாக வாய்ப்புள்ளது.

புதிய ஐடியாக்கள் மனதில் பிறக்கக்கூடும். கடினமான காலகட்டத்தில் கூட, உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டுடன் வெளிப்படுத்தலாம்.

எனவே, உங்களின் மன அழுத்தம் குறைந்து, வாழ்க்கை சூழலை ஆராயவும், படைப்பாற்றலை மேம்படுத்தவும் இது உதவுகிறது.