'ஸ்மோக் உணவு வகைகளை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம், தாவணகெரேவில் 'ஸ்மோக் பிஸ்கெட்' சாப்பிட்ட சிறுவன், கடுமையான வலியில் துடிதுடித்த வீடியோ, இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

'திரவ நைட்ரஜன்' வாயிலாக தயாரிக்கப்படும், ஸ்மோக் வகை உணவுகள் , அதீத குளிர் காரணமாக இவை சுவாசப்பாதை, உணவுப்பாதையை உறைய வைத்துவிடும் என உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திரவ நிலையில், நைட்ரஜன் இருக்கும்போது அதன் வெப்பநிலை, மைனஸ் 196 டிகிரியாக இருக்கும். பிஸ்கட்டை திரவ நைட்ரஜனில் முக்கி கையில் எடுத்து, வாயில் போட வேண்டும்.

அந்த சில நொடி நேரத்தில், திரவ நைட்ரஜன் ஆவியாகி விடும். ஆனால், திரவ நைட்ரஜனை அப்படியே பருகினால், கடும் குளிர்ச்சியான அது, நேரடியாக சுவாசப் பாதை மற்றும் உணவுக் குழாய் போன்றவற்றில் புண்களை ஏற்படுத்தும்.

எவ்வாறு கடுமையான வெப்பம் தீக்காயங்களை ஏற்படுத்துமோ, அதேபோல், அதீத குளிர் தன்மையும் தீங்கை ஏற்படுத்தும்

இந்த உணவு வகைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பாதிப்பை ஏற்படுத்தும். கண்பார்வை பாதிப்பு, பேசும் திறன் பாதிப்பு மற்றும் உயிருக்கும் ஆபத்தாக அமையும்.

உயிருக்கு ஆபத்தானதாக உணவு வகை இருந்தால், அதை விற்பனை செய்பவர்கள் மீது 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், திரவ நைட்ரஜன் பயன்படுத்தி பிஸ்கட், பீடா, ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும், ஹோட்டல்கள், மதுக்கூடங்கள் உள்ளிட்டவை கணக்கெடுக்கும் பணியும் தற்போது துவங்கப்பட்டுள்ளது.