எதிர்காலத்தில் ஊட்டச்சத்து உணவு: பூச்சிகள் நுகர்வை சார்ந்திருக்குமா ?
உலகின் மக்கள் தொகை 800 கோடியைத் தாண்டி பெருகிக் கொண்டே செல்லும் சூழலில், அனைவருக்கும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு கிடைப்பது சாத்தியமா என்றால் சந்தேகம்தான்.
ஆனால், இதை ஈடு செய்ய ஆராய்ச்சியாளர்கள் பூச்சிகளை உட்கொள்ளலாம் என்கின்றனர். மனிதர்கள் பூச்சிகளை உண்ணும் செயலை 'என்டோமோபேஜி' என குறிப்பிடுகின்றனர்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தகவலின்படி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் 80 சதவீதம் மக்கள் பூச்சிகளை உணவாக உட்கொள்வது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில், வட மாநிலங்களில் வாழும் பல இன பழங்குடி மக்களும் பூச்சிகளை உணவாக உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தென்னிந்தியாவிலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் வாழ்ந்த பழங்குடியின மக்களும் பூச்சிகளை உணவாக உட்கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மெக்சிகோ, சீனா, பிரேசில், மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இன்றும் மக்களால் இது போன்ற பாரம்பரிய உணவுகள் உட்கொள்ளப்படுகின்றன.
மெக்சிகோவில் வெட்டுக்கிளி பூச்சிகளை காரமான சுவையில் உண்கின்றனர். இந்தோனேசியாவில் டிராகன்ஃபிளைஸ் என்ற பூச்சிகளையும், தென்னாபிரிக்காவில் கரையான்களையும் உட்கொள்வர்.
பூமியில் 7.5 லட்சம் பூச்சியினங்கள் இருக்கும் நிலையில், இதுவரை 2,000க்கும் மேற்பட்ட உண்ணக் கூடியப் பூச்சி இனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.