சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்., 15ல் கொண்டாடப்படுகிறது.
உலக உணவு உற்பத்தியில் கிராமப்புற பெண்களின் பங்கு தான் அதிகம்.
காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பூக்கள் உள்ளிட்ட விவசாயத் துறையின் முதுகெலும்பாக இவர்கள் திகழ்கின்றனர்.
உலகளவில் பெண்களின் வேலைவாய்ப்பில், மூன்றாவது இடத்தில் விவசாயத்துறை உள்ளது. ஆப்ரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளில் 60 சதவீத பெண்கள், விவசாயப் பணிகளில் தான் ஈடுபடுகின்றனர்.
கிராம பெண்களின் வேலை நேரம், ஆண்களை விட கூடுதலாக உள்ளது.
அவர்களின் தொழில்களுக்கு கடனுதவி வழங்குதல், வீடு வழங்குதல், இலவச மருத்துவ பரிசோதனை , சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை அவர்களுக்கு செய்து தருவது ஒவ்வொரு அரசின் கடமை.
கிராமப்புற வளர்ச்சி, விவசாயம், உணவுப் பாதுகாப்பு போன்றவற்றில் கிராமப்புறப் பெண்களின் முக்கியப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
குறிப்பாக பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதையும், கிராமப்புறப் பெண்களின் உரிமைகளை நிலைநாட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.