மூலப்பெயரிலான மருந்துகளை மட்டுமே இனி பரிந்துரைக்கணும்... மத்திய அரசு உத்தரவு !
நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களுக்கான, நெறிசார் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளை, தேசிய மருத்துவ ஆணையம், மூன்றாண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது.
அதில், 'ஜெனரிக்' எனும், மூலப் பெயர் கொண்ட மருந்துகளை மட்டுமே டாக்டர்கள் பரிந்துரைக்க வேண்டும்; மீறுவோர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
பல்வேறு தரப்பிலிருந்து இதற்கு ஆட்சேபனைகள் எழுந்தன. மூலப் பெயர் கொண்ட மருந்துகளை பரிந்துரைப்பதில் தவறில்லை; ஆனால், அதன் தரத்தை உறுதி செய்வது குறித்த கேள்வி எழுந்தது.
பிரபல மருந்து நிறுவனங்களின் உற்பத்தி தரத்துக்கு, சிறியளவில் மருந்து உற்பத்தி செய்வோரால், ஈடு கொடுக்க முடியாதென, விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
இதனால், நோயாளிகள் குணமடைவதில் காலதாமதம் மற்றும் தரமற்ற மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்தது.
எனவே, நாட்டில் உற்பத்தியாகும் மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்துவதை ஒழுங்குமுறைப்படுத்திய பின், இத்தகைய விதிகளை அமல்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது.
அதை ஏற்று, தேசிய மருத்துவ ஆணையம், அந்த விதிகளை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தெரிவித்தது.
இந்நிலையில், 2023 வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டுமென, மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மூலப் பெயரிலான மருந்துகளை மட்டுமே, மத்திய அரசு மருத்துவமனைகளில் பரிந்துரைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.