குழந்தைகளை கவரும் பாலக்கீரை தோசை

வீடுகளில் முட்டை தோசை, இனிப்பு தோசை, வெள்ளை தோசை அடிக்கடி தயாரிக்கப்படும். சற்று வித்தியாசமாக பாலக்கீரையில் தோசை செய்து பார்க்கலாமே...

தேவையான பொருட்கள்: ஒரு கட்டு பாலக்கீரை, ஒரு கப் ரவை, ஒரு கப் கோதுமை மாவு, அரை கப் அவல், அரை கப் தயிர்

ஒரு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை தேவையான அளவு, அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா, நெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு

செய்முறை : அடுப்பை ஆன் செய்து, பெரிய பவுலில் கீரையை போட்டு நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ரவை, கோதுமை மாவு, அவல், தயிர் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில் வேகவைத்த கீரை, ஊற வைத்த பொருட்கள், உப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலையை போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.

இதனை பாத்திரத்துக்கு மாற்றி அதனுடன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து, சிறிது நேரம் மூடி போட்டு வைத்து விடவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடானதும் மாவை ஊற்றி சுற்றி விட்டு, நெய் விட்டு மூடி வைத்து வேக விடவும்.

ஒரு பக்கம் வெந்ததும் எடுத்தால் போதும். அவ்வளவு தான் சுவையான பாலக்கீரை ரவை தோசை தயார்.