தைராய்டு பாதிப்பால் ஏற்படும் உடல் மாற்றங்கள்
கழுத்தின் முன் பகுதியிலுள்ள சிறிய தைராய்டு சுரப்பி, உடலின் வளர்சிதை மாற்றம், உடல் வெப்பம் உட்பட பல விஷயங்களை பராமரிக்கத் தேவையான ஹார்மோனை சுரக்கிறது.
இச்சுரப்பி சரியாக வேலை செய்யாவிட்டால், பாதிப்பை உடல் முழுதும் உணர முடியும்.
வயது அதிகரிக்கும்போது, தைராய்டு சுரப்பதில் மாற்றங்கள் ஏற்படலாம். குறைவாக சுரந்தால், உடலின் செயல்கள் மந்தமாகும்.
குறிப்பிட்ட வயதிற்கு மேல் அதிகமாக சுரப்பது ஆபத்தானது. இதயம், எலும்புகள், வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கலாம்.
பொதுவாக நாம் பயன்படுத்தும் உப்பில், அயோடின் கலப்பது கட்டாயமாக்கப்பட்டு இருந்தாலும், அயோடின் குறைபாடால், 'காய்டர்' எனப்படும் தைராய்டு சுரப்பி வீக்கம் இன்னும் உள்ளது.
தைராய்டு அறிகுறிகள் பெரும்பாலும் சோர்வு, வயது முதிர்வு தொடர்பான பிரச்னைகளை போலவே இருப்பதால், பலர் இதை கவனிக்கத் தவறுகின்றனர்.
இவற்றை முன்கூட்டியே கண்டறிந்தால், மாத்திரை மற்றும் சிகிச்சை மூலம் பாதிப்பை குறைக்க முடியும்.
தைராய்டை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும்; அயோடின், செலினியம், துத்தநாகம் நிறைந்த சத்தான உணவை சாப்பிட வேண்டும்.
மன அழுத்தமின்றி இருப்பதுடன், போதுமான அளவு துாக்கமும் அவசியம். டாக்டரின் ஆலோசனையின்றி தைராய்டு மருந்துகளை சாப்பிடக்கூடாது.