தசை சிதைவு நோய்க்கு தீர்வு தரும் பிசியோதெரபி

உடலின் இயக்கத்துக்கு ஆதாரமான தசைகளை, பலவீனமடையச் செய்கிறது தசை சிதைவு நோய். இதற்கு முக்கிய காரணி, மரபணுவில் ஏற்படும் மாற்றம்.

தசை புரதங்களில் குறைபாடுகள் ஏற்பட்டு, தீவிரமாகும் போது, தசை நார்கள் சிதைய ஆரம்பிக்கும். இதை, 'தசை வளக்கேடு, தசையழிவு நோய்' எனவும் சொல்வர்.

மரபணு பிரச்னை உடைய பெற்றோர் ஒருவரின் மரபணு ஆதிக்கம் செலுத்தும்பட்சத்தில், அவர்களின் குழந்தைகளுக்கு, 50 % தசை சிதைவு நோய் வர வாய்ப்புள்ளது.

இவர்களுக்கு, தசைகள் சுருங்கி விரியும் தன்மையை இழக்கும் முகம் மற்றும் தோள்பட்டை தசை சிதைவு, கண், தொண்டை தசை சிதைவு, கை - கால் தசை சிதைவு ஆகியவை ஏற்படலாம்.

நடப்பதில், படியேறுவதில், ஓடுவதில் சிரமம், அடிக்கடி தவறி விழுவது, மெதுவான நடை, தசைகளில் இறுக்கம், வலி, கெண்டைக்கால் தசைகள் இயல்பாக இல்லாதது போன்றவை அறிகுறிகள்.

இதய, நுரையீரல் செயல்பட்டில் பாதிப்பு, சுவாசம் சம்பந்தமான பிரச்னைகள், வலிமையிழந்த கண்ணிமைகள் போன்றவையும் அறிகுறிகளாகும். மருத்துவ பரிசோதனையால் உறுதி செய்யலாம்.

இதற்கு தனியாக மருந்துகள் இதுவரை இல்லை. சில வகையான தசை சிதைவு நோய்க்கான மருந்துகள், இன்னும் பரிசோதனை நிலையிலேயே உள்ளன.

சுவாச பிரச்னையுள்ள தசை சிதைவுநோய் உள்ளவர்கள், அதற்கான மருத்தவரிடம் ஆலோசனை பெற்று, சுவாச பிரச்னைகளை முதலில் குறைப்பது அவசியம்.

இதற்கு மருந்துகள் கண்டுபிடிக்க முடியாத நிலையிலும், பிசியோதெரபி பயிற்சிகள் பலன் தரும். மேலும், எலும்பு வளைவு குறைபாடு வராமல் தடுக்கவும் முடியும்.

தசைகள் வலு குறையாமல் தடுக்கவும், அவர்களின் வேலைகளை அவர்களே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு பிசியோதெரபி மருத்துவத்தில், பயிற்சிகளும், ஆலோசனைகளும் உள்ளன.