இம்யூனிட்டி தரும் கற்பூரவல்லி - வெற்றிலை ரசம் ரெசிபி இதோ!
நோய் தொற்று காலத்தில், இம்யூனிட்டியை அதிகரிக்க உதவுவது ரசம். அதில் சளி தொல்லையை விரட்டும் வெற்றிலை, கற்பூரவல்லி சேர்த்து செய்தால் விரைவான நிவாரணம் கிடைக்கும்.
இந்த ரசம் செய்ய இதெல்லாம் தேவை : தக்காளி - 2, புளி - நெல்லிக்காய் அளவு, பருப்பு தண்ணீர் 1/4 கப், மிளகு - 1 ஸ்பூன், வரமிளகாய் - 4, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கற்பூரவல்லி - 3, வெற்றிலை - 2, பூண்டு - 6 பல், சீரகம் - 1/2 ஸ்பூன், மல்லிப்பொடி - 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் - 2 சிட்டிகை, பெருங்காய தூள் - 1 சிட்டிகை
செய்முறை : முதலில் தக்காளிகளை எடுத்து பிசைந்து கூழ்ம நிலையில் தயார் செய்து, ஒரு பாத்திரத்தில் தனியே எடுத்து வைக்கவும். அதேபோல் புளி கரைசலையும் தயார் செய்துக்கொள்ளவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் வரமிளகாய், பூண்டு, சீரகம், மிளகை வறுத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைக்கவும். அதில் கற்பூரவல்லி, வெற்றிலையை சேர்த்து அரைக்கவும்.
ரசம் வைக்கும் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் இதில் அரைத்து வைத்துள்ள மசாலா பொடி, மல்லிப்பொடி, பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போனவுடன் தக்காளி சாறை ஊற்றி, பின் அதில் தேவையான அளவு உப்பு, பருப்பு தண்ணீர், புளிகரைசல் ஆகியவற்றை சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.
ரசம் நுரைக்கட்டி கொதிக்கும் போது அதில் நறுக்கிய கொத்தமல்லி தூவ சுவையான, சத்தான கற்பூரவல்லி - வெற்றிலை ரசம் ரெடி.