ஆரோக்கியம் தரும் பாலக், பன்னீர் சப்பாத்தி! ரெசிபி இதோ!

எப்போதும் ஒரே விதமான சப்பாத்தி சாப்பிட்டு, போர் அடிக்கிறதா? பாலக், பன்னீர் சப்பாத்தி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்: பாலக்கீரை - ஒரு கட்டு, பன்னீர் - 100 கிராம், கோதுமை மாவு - 2 கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு, நெய்,உப்பு தேவையான அளவு

முதலில் பாலக்கீரை, பன்னீர், பச்சை மிளகாய், இஞ்சியை மிக்சியில் போட்டு, சிறிது நீர் சேர்த்து அரைக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு போட்டு பிசையவும். பின் அதில் அரைத்து வைத்தவற்றை சிறிது, சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

இதன் மீது நெய் தடவி, 15 நிமிடம் மூடி வைக்கவும். அதன் பின் அடுப்பில் தோசைக்கல் வைக்கவும்.

சூடானதும் சப்பாத்தி மாவை சிறு, சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி திரட்டி போட்டு, இரண்டு பக்கமும் வேக வைத்தால், சுவையான பாலக், பன்னீர் சப்பாத்தி ரெடி.

பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியாக இருப்பதால், சிறு பிள்ளைகளும் விரும்பி சாப்பிடுவர். உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும்.