கிரீன் கார்டு விதியில் தளர்வு.. இந்தியர்களுக்கு பெரும் நிம்மதி!

அமெரிக்க அரசு வழங்கும் நிரந்தர குடியுரிமை ஆவணம் கிரீன் கார்டு எனப்படுகிறது.

இதை பெற்றவர்களுக்கு அமெரிக்காவின் எந்த மாகாணத்திலும் நிரந்தரமாக வாழவும், வேலை செய்யவும் உரிமை கிடைக்கும்.

வேலைவாய்ப்பு, குடும்ப உறவுகள், முதலீடு ஆகியவை மூலம் ஒருவர் கிரீன் கார்டு பெற முடியும். சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், கிரீன் கார்டு வழங்குவதற்கான கொள்கையை கடுமையாக்கினார்.

முன்பு அமெரிக்காவில் எச்1பி, எல்1 உள்ளிட்ட தற்காலிக விசாவில் பணியாற்றுவோர், அமெரிக்காவில் தங்கியிருந்தபடியே கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி இருந்தது.

புதிய விதியின்படி, விசாவில் இருப்பவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறி, சொந்த நாட்டில் உள்ள அமெரிக்க துாதரகம் மூலம் விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வேலை விசாவில் உள்ள இந்தியர்களுக்கு கிரீன் கார்டுக்கு பல வருட காத்திருப்பு காலம் இருப்பதால், அவர்கள் இந்தியா திரும்பினால், வேலை இழக்க நேரிடும்.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அமெரிக்க சுங்க மற்றும் குடியேற்றத் துறை புதிய விதியில் விலக்குகளை அளித்துள்ளது.

அதன்படி, நாட்டுக்கு பொருளாதார நன்மை மற்றும் தேச நலன் ஆகியவற்றின்கீழ் வருவோர், அமெரிக்காவில் தங்கியிருந்தே விண்ணப்பிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

இந்தத் திருத்தம் தொழில்நுட்பம், ஆராய்ச்சி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் உள்ள இந்தியர்களுக்கு பொருந்தும் என்பதால் அவர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.