மக்களை அச்சுறுத்தும் ஸ்கிரப் டைபஸ்: பூச்சிகள் கடித்தால் அலட்சியம் காட்டாதீர்!

தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் பாதிப்பும் மக்களை அச்சுறுத்தி, உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த 'ஸ்கிரப் டைபஸ்' என்பது, ஒரு வகை பாக்டீரியா தொற்று.

'ரிக்கட்ஸியா' எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்கள், மனிதர்களை கடிக்கும்போது, அவர்களுக்கு உண்ணி காய்ச்சல் ஏற்படுகிறது.

பாதிப்பு ஏற்பட்டோருக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு உள்ளிட்டவற்றுடன் தடிப்புகள் போன்ற அறிகுறிகள் தென்படும்.

உண்ணி காய்ச்சலால், இந்தாண்டில் இதுவரை, 3,000க்கும் மேற்பட் டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இத்தகைய பாதிப்பு உள்ளது.

'ஸ்கிரப் டைபஸ்' பாதிப்பு ஏற்பட்டால், பூச்சி கடித்த இடத்தில் சிவப்பு சிவப்பாக சிறிய தடிப்பு ஏற்படும்; தலைவலி, குளிர் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

ஆரம்பத்தில் கண்டறியாமல் அலட்சியப்படுத்தினால், பூச்சி கடித்த இடத்தில் ரத்தக்கட்டு ஏற்பட்டு, உள்ளுறுப்புகள் செயலிக்கும்.

இதன் வாயிலாக கோமா, மரணம் உள்ளிட்ட தீவிர பிரச்னை உருவாகும். எனவே, பூச்சி போன்றவை கடித்தால் அலட்சியம் காட்ட வேண்டாம்.

பொது மக்கள் தங்கள் வீட்டை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி, சுத்தமாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதர் மண்டிய இடங்கள், வனப்பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும்போது, பூச்சிகள், ஒட்டுண்ணிகள் உடல் மீது படாதவாறு தற்காத்து கொள்வது அவசியம்.