மனை சிறக்கும் மகா சிவராத்திரியின் மகிமை தெரியுமா?

சிவராத்திரி என்றதும் நம் நினைவுக்கு வருவது இரவு கண் விழித்தலும், லிங்கங்களுக்கு செய்யப்படும் பலவகையான அபிஷேகங்களும், நான்கு கால பூஜையும்தான்.

யுகம் யுகமாக நடந்து வரும் சிவராத்திரி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அதிலும் மஹா சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவனை ஆராதித்தால் மங்களங்கள் சேரும், மனை சிறக்கும், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி மோட்சம் சித்திக்கும் என்கிறது சிவ புராணம்.

மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி தேய்பிறை சதுர்த்தசி 'மகாசிவராத்திரி'யாக (மார்ச் 8) சிவன் கோயில்களில் கொண்டாடப்படுகிறது.

அன்று சூரியன் மறைந்து மறுநாள் சூரியன் உதிக்கும் வரை நான்கு கால பூஜையை நடத்துவர்.

ஒவ்வொரு கால பூஜையிலும் அபிஷேகம், மலர்கள், பாராயணம், நிவேதனம் என்று மகிழ்ச்சியில் திளைப்பார் சிவன்.

'சிவராத்திரி' என்ற சொல்லுக்கு 'மோட்சம் அருள்வது' என பொருள். இந்நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவனை பூஜிப்பர். சிவராத்திரி பூஜையை முதலில் பார்வதியே முன்னின்று நடத்தினாள். அதில் மகிழ்ந்த சிவன் அருளை வாரி வழங்கினார்.

ராத்திரி என்ற சொல்லுக்கு அளித்தல் என்ற பொருளும் உண்டு. உலக உயிர்களும் மோட்சத்தை அளிப்பவர் சிவபெருமான். எனவே, சிவராத்திரி என அழைப்பதாகவும் கூறப்படுகிறது.