இத்தனை காரணங்களா தீபாவளியைக் கொண்டாட!
தீபாவளி, ஹிந்துக்கள் பண்டிகை என பொதுவாக குறிப்பிடப்பட்டாலும், சமணம், சீக்கியம் என இந்தியா முழுக்க வெவ்வேறு மதத்தினர் பல காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.
தமிழகத்தில், நரகாசுரனை, சத்தியபாமாவுடன் இணைந்து கிருஷ்ணர் வதம் செய்த நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
சக்தி, 21 நாட்கள் கேதாரகவுரி விரதம் முடித்த பிறகு, சிவன் தனது பாகமாக ஏற்று உமையொரு பாகமாக நின்ற நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணம் கூறுகிறது.
14 ஆண்டு வனவாசத்துக்குப் பின், ராவணனை வென்று, சீதையை மீட்டு ராமர் அயோத்தி திரும்புவதை மக்கள் விளக்கேற்றி வரவேற்ற நாளே தீபாவளி என வடமாநிலங்களில் கொண்டாடுகின்றனர்.
சீக்கியர்களைப் பொறுத்தவரை, அவர்களின் குரு மற்றும் 52 ஹிந்து அரசர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பந்தி சோர் திவாஸ் என்ற பெயரில் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.
பவுத்தர்களில் ஒரு பிரிவான நேவார் பவுத்தர்கள், லட்சுமியை வணங்குவதன் வாயிலாக கொண்டாடுகின்றனர்.
சிலர் பாற்கடலைக் கடைந்தபோது லட்சுமி பிறந்ததை நினைவுகூர்ந்து, செல்வத்தின் அதிபதியான அவரை, தீபாவளி நாளில் வணங்குகின்றனர்.
அசாம், ஒடிசா, மே.வங்கத்தில், தீபாவளி தினத்தில், லட்சுமிக்கு பதில் மகா காளியை வணங்குகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில், பிரிஜ் பகுதியில், கோவர்த்தன பூஜையாக கொண்டாடுகின்றனர்.
மார்வாரிகள், புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். தீபாவளிக்கு அடுத்த புதுக்கணக்கு ஆரம்பித்து கொண்டாடுகின்றனர்.
இப்படி, காரணங்கள் எதுவாயினும் இருள் விலகி, மகிழ்ச்சி ஒளிர்வதற்கான பண்டிகை கொண்டாட்டத்துக்குரியது என்பது போதாதா, தீபாவளியைக் கொண்டாட!