தாய்ப்பால் எளிதாக சுரக்க... இளம்தாய்களுக்கான உணவுகள் சில!

கீரை வகைகள், கேரட், பீட்ரூட், நீர்ச்சத்துள்ள சுரைக்காய், முள்ளங்கி போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் பால் சுரப்பு சீராக இருக்கும். மலச்சிக்கல் பிரச்னையை தடுக்கலாம்.

பேரீச்சம், அத்திப்பழம் போன்றவற்றை தினமும் சாப்பிட, பால் சுரக்கும் தன்மை அதிகரிக்கும். இதிலுள்ள இரும்புச்சத்து தாய்ப்பாலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பூண்டை தினமும் உணவில் அதிகளவில் சேர்த்து வர பால் சுரப்பு அதிகரிக்கும்; உடம்பிலுள்ள கெட்டக் கொழுப்புகள் குறையும்.

வெந்தயம் ஊற வைத்த தண்ணீரையோ அல்லது வெந்தயக் கஞ்சியையோ குடிக்கலாம். இது, கருப்பையை சுருங்கச் செய்து, கருப்பையிலுள்ள அழுக்குகளை நீக்குகிறது.

முளைகட்டிய பயறு வகைகள், சிறுதானிய வகை உணவுகளை சாப்பிடலாம். இது தாய், குழந்தை இருவருக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இளம் தாய்கள் அசைவப் பிரியர்கள் என்றால் இருக்கவே இருக்கு பால் சுறா மீன் மற்றும் பால் சுறா கருவாடு. இதை சாப்பிடுவதால் தாய்ப்பால் சுரத்தல் அதிகரிக்கும்.

பால் கொடுக்கும் இளம் தாய்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பது அவசியம். குழந்தைக்கு பால் கொடுக்கும் போதோ அல்லது கொடுத்த பின்னரோ கட்டாயமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.