இஷ்யூ ஆகி விட கூடாது... வாசனை தரும் வெட் டிஷ்யூ
ஈரம் பொதிந்த காகித கைக்குட்டையை வெட் டிஷ்யூ என்கிறோம். பயணம், விழாக்கள், பார்ட்டி போன்ற சூழல்களில் இது பலருக்கும் அவசியமான பொருளாக மாறியுள்ளது.
பயணத்தின் போது தண்ணீர் கிடைக்காத சூழலில் கைகளை சுத்தம் செய்ய வெட் டிஷ்யூ பெரிதும் உதவுகிறது.
அதேபோல், வெளியில் இருந்து களைப்பாக வீடு திரும்பும் போது முகம் கழுவ சோம்பேறித்தனமாக இருந்தால், வெட் டிஷ்யூ மூலம் மெதுவாக துடைத்தால் உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும்.
ஆனால், வெட் டிஷ்யூவில் வாசனை மற்றும் கிருமி நாசினிக்காக சில வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.
இது கைகளை சுத்தம் செய்ய ஏற்றதாக இருந்தாலும், முகத்தின் தோல் மிகவும் மென்மையானதால் அடிக்கடி துடைக்க பயன்படுத்துவது நல்லதல்ல, என அழகு கலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
தொடர்ந்து வெட் டிஷ்யூ பயன்படுத்தும் போது, முகத்தின் இயற்கையான ஈரப்பதம் குறைந்து, தோல் வறட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் ஒரு முறை பயன்படுத்திய டிஷ்யூவை மீண்டும் பயன் படுத்துவது ஏற்றதல்ல. பயன்படுத்திய பிறகு குப்பையில் போட வேண்டும்.
வெட் டிஷ்யூ என்பது ஒரு தற்காலிக தீர்வுதான். சோப்பும் தண்ணீரும் தரும் சுத்தத்திற்கு இது ஈடாகாது என கூறப்படுகிறது.