நாட்டில் பிறர் புகைத்ததை சுவாசித்து இறந்தோர் 3.25 லட்சம் பேர்... ஆய்வில் தகவல் !

புகைப்பவர்களுக்கு என்ன உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறதோ, அதைவிட அதிக பாதிப்பு அவர்கள் வெளியிடும் புகையை அருகில் இருந்து சுவாசிக்கும் நபர்களுக்கும் ஏற்படுகிறது.

ஆங்கிலத்தில் இதை, 'பாசிவ் ஸ்மோக்கிங்' என்பர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, 'குளோபல் பர்டன் ஆப் டிசீஸ் - 2023' ஆய்வுக்குழு ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி, கடந்த 2023ல் உலகம் முழுதும் 270 கோடி பேர், புகைப்பிடிப்போர் வெளியிடும் புகையை சுவாசிக்கும் சூழலில் இருந்துள்ளனர்.

அவர்களில் பாதி பேர் இந்தியா, சீனா மற்றும் இந்தோனேஷியா ஆகிய மூன்று நாடுகளில் உள்ளனர். இதில், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மட்டும் 76.7 கோடி பேர்.

சீனாவில் 66.4 கோடி பேரும், இந்தியாவில் 44.4 கோடி பேரும், இந்தோனேஷியாவில் 14.2 கோடி பேரும் பிறர் வெளியிடும் புகையை பல்வேறு கட்டங்களில் சுவாசித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 1990ல் 37.5 கோடி பேர் பிறர் புகைப்பதை சுவாசிக்கும் நிலையில் இருந்தனர். இது 2023ல் 44.4 கோடியாக அதிகரித்துள்ளது.

பிறர் புகைத்ததை நீண்ட காலம் சுவாசித்ததன் காரணமாக நோய் பாதிப்புக்குள்ளாகி இறந்தோர் எண்ணிக்கை, 1990ல் நம் நாட்டில் 2.17 லட்சமாக இருந்தது.

இது, 2023ல் 3.25 லட்சமாக அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிறர் புகைப்பதை சுவாசிப்பதால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது நுரையீரல் பாதிப்புடன் மட்டும் நின்றுவிடாது. நீண்ட கால அடிப்படையில் உடலின் பல்வேறு உறுப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

குறிப்பாக, மற்றவர்கள் புகைக்கும் புகையை சுவாசிப்பதால், இதய தமனி நோய் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு மோசமான விளைவுகள் உண்டாகலாம்.

குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சி நிலையில் இருக்கும். அவர்கள் பிறர் புகைத்து வெளியிடும் புகையை சுவாசித்தால் பாதிப்பு அதிகம் இருக்கும்.

எனவே, நாடு முழுதும் புகைப்பிடிப்பதை குறைப்பதில், அனைவரும் கவனம் செலுத்த வேண்டுமென்பது நுரையீரல் நிபுணர்களின் அட்வைஸாகும்.