கல்லீரல் செயல்பாட்டை சொல்லும் ஏ.எல்.டி., பரிசோதனை!

அதிகமாக கொழுப்பு உணவுகள் சாப்பிடுவது, மது அருந்துவது, உடற்பயிற்சி தவிர்ப்பது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களால் கல்லீரல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகின்றன.

கல்லீரலில் பிரச்னை ஏற்பட்டால், நோய் முற்றிய நிலையில் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது.

காரணம், மிகப்பெரிய உள் உறுப்பான கல்லீரல், தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் திறனை இயல்பாகவே பெற்று உள்ளது.

80 சதவீதத்திற்கும் மேல் செயல்பாட்டை இழந்து, இனி தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் தான், நோயின் அறிகுறிகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும்.

அந்த சமயத்தில் நோய் முற்றிய நிலைக்கு வந்திருக்கும். அதன்பின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தவிர வேறு வாய்ப்புகள் இல்லாமல் போகலாம்.

கல்லீரல் செயல்பாட்டை அறிய ரத்த பரிசோதனை செய்யும் போது, ஏ.எல்.டி., என்ற என்சைம் அதிக அளவில் இருப்பது, கல்லீரல் செல்களில் பாதிப்பு, அழற்சி இருப்பதற்கான அறிகுறி தெரியும்.

கல்லீரலில் பாதிப்பு ஏற்படும் போது, கல்லீரல் செல்கள் இந்த என்சைம்களை அதிக அளவில் ரத்தத்தில் வெளியிடுகின்றன.

உடல் பருமன், மதுப்பழக்கம், வைரஸ் ஹெபடைடிஸ் தொற்று பாதிப்பு இருப்பவர்களின் ரத்த மாதிரிகளை சோதிக்கும் போது, ஏ.எல்.டி., என்சைம் அளவு அதிகமாக இருப்பதை பார்க்க முடியும்.

கல்லீரல் நோய் முற்றிய நிலையில், ஏ.எல்.டி., மற்றும் பிற கல்லீரல் என்சைம்களை வெளியிட போதுமான கல்லீரல் செல்கள் இல்லாமல் போய்விடும்.

எனவே, 'லிவர் சிரோசிஸ்' எனப்படும் கல்லீரல் செயல் இழப்பு உள்ள நோயாளிகளுக்கு, அல்ட்ராசவுண்ட், கல்லீரல் பாதிப்பின் தீவிரத்தை அறிய, பைப்ரோ ஸ்கேன் பரிசோதனைகள் தேவைப்படலாம்.

கல்லீரல் பாதிப்பிற்கான காரணத்தை கண்டறிந்து, தேவையான மருத்துவ ஆலோசனை பெறவது அவசியம். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், இப்பாதிப்பை முற்றிலும் சரி செய்ய முடியும்.