பற்களுக்கும், இதயத்துக்கும் உள்ள மறைமுக தொடர்பு

வாய் என்பது உடலின் மற்ற உறுப்புகளுடன் நெருக்கமாக இணைந்த ஒரு பகுதி.

சில நேரங்களில், வாய், இதய நோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்தும் விதமாக, உதடுகள் அல்லது நாக்கு நீல நிறமாக மாறலாம்...

ஈறுகளில் அதிக ரத்தப் போக்கு, வாய் வறட்சி, வாய்ப்புண் போன்றவை ஏற்படலாம்.

ஈறு நோய்களும், இதய நோய்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று குறிக்கும் வகையில், சர்வதேச இதய சங்கம் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

செல்களுக்கிடையே, நோய் எதிர்ப்பு சக்தி குறித்த தகவல்களை பரிமாறும் துாதுவர்களாக செயல்படுபவை, சைட்டோகைன் என்கிற புரதத் துகள்கள்.

ஈறு நோய் ஏற்படும் போது, பாக்டீரியாக்களை அழிக்க, இத்துகள்கள், நோய் எதிர்ப்பு சக்தியை வழக்கத்திற்கு மாறாக, தீவிரமாகத் துாண்டுவதால், ஈறுகளில் அழற்சி உண்டாகிறது.

ஈறுகளை பாதித்த பாக்டீரியாக்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து, இதயம் மற்றும் ரத்தக் குழாய்களில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

இதய ரத்த நாளங்களிலுள்ள கொரோனரி செல்களுக்குள் ஊடுருவி, இதய நோய், பக்கவாதத்தை ஏற்படுத்தும்.

பல் இடுக்குகளில் உருவாகும் 'பிளாக்' எனும் பாக்டீரியாத் தொற்று, ரத்தக் குழாய்களில் அடைப்பை உருவாக்கி, இதயத்தில் இதயத்தின் உள் உறைத்தொற்றிற்கும் வழி வகுக்கும்.

இதனால், எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். குறிப்பிட்ட இடைவெளியில் பல் பரிசோதனைகள் செய்வதால், இதய நோய்களைத் தடுக்கலாம்.

அவ்வப்போது டாக்டரிடம் சென்று, பற்களை சுத்தம் செய்வது, தினமும் 2 முறை பல் துலக்குவது, ஆரோக்கியமான உணவு, புகை, புகையிலை தவிர்ப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கடவாய் பல் உட்பட, சில பற்களை இழந்தவர்களுக்கு, சரியாக மென்று சாப்பிட முடியாததால், உணவு பழக்கங்கள் பாதிக்கப்பட்டு, உடல் நலம், இதய ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களின் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தினால், ஈறு நோய் மற்றும் இதய நோயை தடுக்கலாம்.