சைபர் குற்றங்களுக்கு தீர்வு காண புது புது முயற்சிகளை முன்னெடுக்கும் காவல் துறை!

நமது அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்மார்ட்போன் மூலமாக மாறிவிட்டது. இதனால், ஸ்மார்ட்போனை மையமாக வைத்து சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

இளம்பெண்கள் பல்வேறு வகையான சைபர் குற்றங்களால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் புகாரளிக்க பயந்து அமைதியாக இருப்பது குற்றம் புரிபவர்களுக்கு வசதியாக உள்ளது.

விழிப்புணர்வுடன் இருந்தால் இவற்றை தவிர்க்கலாம். ஆனால் கவனக்குறைவால் எதிர்பாராத சூழலில் பலரும் இத்தகைய குற்றங்களால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

பாலியல் ரீதியாகவோ அல்லது பணம் தொடர்பாகவோ ஏமாற்றப்பட்டிருந்தால் அவர்கள் காவல்துறையின் மாநில சைபர் உதவி மையமான 1930 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

சைபர் மோசடி நடைபெற்றால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்தால், அவர்கள் நம் பணத்தை குற்றவாளிகள் எடுக்க முடியாமல் தடுப்பார்கள்.

சமீபத்தில் கோவை மாநகர காவல்துறை சார்பில் 'அக்கா' என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதில், கல்லூரிகளுக்கு, குறிப்பாக பெண்கள் கல்லூரிகளுக்கு பெண் காவல் ஆய்வாளர் நியமிக்கப்படுவார்.

இத்திட்டத்தால் மாணவ, மாணவிகளிடம் காவல் துறை மீது நம்பிக்கை அதிகரிக்கும்; துவக்க நிலையிலேயே அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்கவும் வாய்ப்புள்ளது.

இதுதவிர சமூக பாதுகாப்புத் துறை சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தீர்வு காண 181 என்ற உதவி எண் செயல்படுகிறது.

குடும்ப வன்முறை, அலுவலகத்தில் பாலியல் சீண்டல் போன்ற புகார்கள் மட்டுமின்றி, மருத்துவம், சட்டம் மற்றும் காவல் உதவி, மனநல ஆலோசனை போன்ற உதவிகளும் கிடைக்கின்றன.