தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை.. விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்...

நிபா வைரஸ், விலங்குகள் வாயிலாக பரவும் நோய் தொற்று. குறிப்பாக, பழ வகை வவ்வால்கள், பன்றிகள், நாய்கள், குதிரைகள் போன்ற விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.

வவ்வால்கள் உமிழ்நீரால் மாசுபட்ட பழங்களை சாப்பிடுவதன் வாயிலாகவோ, பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கி தொடர்பு கொள்வதன் வாயிலாகவோ, நோய் தொற்று மற்றவர்களுக்கு பரவுகிறது.

காய்ச்சல், தலைவலி, வாந்தி, குழப்பம், துாக்கமின்மை, மூச்சுத்திணறல், மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் உள்ளதா என, மக்கள் கவனிக்க வேண்டும்.

தற்போது வரை, தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும், பதற்றமின்றி விழிப்புடன் இருக்குமாறு, பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட ஆறு முதல் 21 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படும். இந்த நோய் பாதித்தவர்கள், 40 முதல் 75 சதவீதம் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.

இது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

கழுவாத அல்லது கீழே விழுந்த பழங்களை சாப்பிடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

பதநீர், கள் போன்றவற்றை அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். துார்வாரப்படாத கிணறுகளின் அருகே செல்லக்கூடாது.