இந்த உணவு முறை மூளைக்கு நல்லது

மத்திய தரைக்கடலை ஒட்டிய கிரேக்கம், இத்தாலி முதலிய நாடுகளில் பின்பற்றப்படும் உணவுமுறை பல சிறப்புகளை உடையது. இது உடலுக்கு பலவித நன்மைகள் செய்யும் என ஆய்வுகளும் கூறுகின்றன.

இதில், பழங்கள், காய்கறிகள், பயறு வகைகள், முழு தானியங்கள், சீஸ் உள்ளிட்ட பால் பொருட்கள் ஆகியவை அதிகளவில் இடம்பெறும். சிலவகை மீன்களைத் தவிர்த்து வேறு இறைச்சி வகைகள் குறைவாகவே இருக்கும்.

சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த இலினாய் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், பிற உணவுகளுடன் மத்திய தரைக்கடல் உணவு வகைகள் பல்வேறு விகிதங்களில் கலந்து தரப்பட்டன.

இதை உட்கொண்டவர்களின் மூளையைத் தொடர்ந்து, சில விதமான எம்.ஆர்.ஐ., ஸ்கேன்கள் எடுத்துக் கண்காணிக்கப்பட்டது.

மத்திய தரைக்கடல் உணவு வகைகளை அதிக விகிதத்தில் உட்கொண்டவர்களின் மூளையிலுள்ள வெள்ளைப் பொருட்கள் நல்ல ஆரோக்கியம் அடைந்திருந்தது தெரியவந்தது.

குறைவான விகிதங்களில் சாப்பிட்டவர்களுக்கு எந்த மாற்றமும் காணப்படவில்லை. மத்திய தரைக்கடல் உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்கள் ஆரோக்கியமடைந்தன.

மூளையில் காணப்பட்ட வீக்கம் குறைந்தது; ரத்தச் சர்க்கரை அளவு சரியாக இருந்தது. இதயம் ஆரோக்கியமாக இருப்பதால், மூளையும் ஆரோக்கியம் அடைகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.