மசாலா சுவையுடன் அள்ளும் பேபி உருளைக்கிழங்கு ரோஸ்ட்
பாரம்பரியமான சமையலில் ஒரு சில மேஜிக் செய்தாலே போதும் சுவை அள்ளும். எனவே, அசத்தலான சுவையுடன் கூடிய பேபி உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெசிபி இதோ...
உருளைக்கிழங்கை மஞ்சள், உப்புச் சேர்த்த தண்ணீரில் அரைவேக்காடு வேகவைத்து தோலை நீக்கிக் கொள்ளவும்.
சூடான கடாயில் குருமிளகு, உளுந்துப்பருப்பு, வரமிளகாயை வறுத்து (எண்ணெய் கூடாது) பவுடராக அரைக்கவும். அதேபோல் சோம்பையும் தனியே வறுத்து அரைக்கவும்.
கடாயில் உருளைக்கிழங்கை பொரிக்கும் அளவுக்கு எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், சிவப்பு மிளகாய், கடுகு போட்டு தாளிக்கவும். அதில் உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக வதக்கவும்.
எண்ணெய் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கக்கூடாது. முங்கும் அளவுக்கு இருந்தால் போதுமானது; உருளைக்கிழங்கு நன்றாக ஃபிரை ஆனவுடன், தனியே எடுத்து வைக்கவும்.
மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உளுந்துப்பருப்பை சேர்த்து தாளிக்கவும். இதில் வறுத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
பெருங்காயத்தூள், இரண்டு டேபிள் ஸ்பூன் குருமிளகுக்கலவைப் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
ஓரிரு நிமிடத்தில் அடுப்பை அணைத்து, ஒரு டீஸ்பூன் சோம்புப் பவுடரை சேர்த்து கிளறவும். பின், ஒரு பவுலில் தனியே எடுத்து மாற்றி வைத்தால் சுவையான பேபி உருளைக்கிழங்கு ரோஸ்ட் தயார்.
பார்க்க வண்ணமயமாக இருப்பது மட்டுமின்றி, குருமிளகு, உளுந்து, மிளகாய் மற்றும் சோம்பு ஆகியவற்றின் காரசாரமான, மசாலா கலவையின் சுவையுடன் அள்ளும்.