உலகின் மிகவும் குட்டி பறவை இதாங்க..!
உலகின் மிகச் சிறிய பறவை, பீ ஹம்மிங்பேர்ட். தமிழில், தேனீ ஓசனிச்சிட்டு எனப்படுகிறது.
கரீபியன் கடல் பகுதி தீவு நாடான கியூபாவில், இப்பறவைகள் உள்ளன. இது, 6 செ.மீ, நீளமும், 2 கிராம் எடையும் உடையது.
இந்த பறவையின் இதயம், நிமிடத்துக்கு 1,260 முறை துடிக்கும். பறக்கும் போது, ஒரு நொடிக்கு, 80 முறை இறக்கைகளை அடித்துக் கொள்ளும்.
இது, மலர்களுக்கு நேராக பறந்து நின்றபடி, தேனை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. தேன் எடுப்பதற்கு வசதியாக, இப்பறவைக்கு நீண்ட, மெல்லிய அலகு உள்ளது.
இப்பறவை சிலந்தி, ஈ, மகரந்த துகளையும் உண்ணும். இதன் உடல் வண்ண மயமான, கணக்கிடவியலா நிறங்களில் ஜொலிக்கும்.
இந்த இனத்தில், பெண் பறவைகள் கூடுகட்டி, இனப்பெருக்கம் செய்யும். மென்மையான தாவர இலைகளில், 2.5 செ.மீ., அளவில், மிகச்சிறிதாக கூடு கட்டும்.
இதன் முட்டை, பட்டாணி விதையை விட, சற்று பெரியது. பெண் பறவை தனியாக அடைகாத்து, குஞ்சு பொரிக்கும்.