பாரம்பரியத்தின் பொக்கிஷம் இந்த ராணியின் படிக்கிணறு !
குஜராத்தின், அகமதாபாத்திலுள்ள பதான் நகரில், சரஸ்வதி ஆற்றங்கரையில் புல்வெளிக்கு நடுவே அமைந்துள்ளது 900 ஆண்டுகள் பழமையான ராணியின் படிக்கிணறு என்ற ராணி கி வாவ்.
இந்தியாவில் உள்ள பாரம்பரியமான சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்று. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இந்த படிக்கட்டு கிணறு இடம் பெற்றுள்ளது.
11ம் நூற்றாண்டில் சோலாங்கி வம்சத்தை சேர்ந்த அரசர் முதலாம் பீமதேவ் நினைவாக, அவரின் மனைவி ராணி உதயமதி, மகன் கர்ணதேவால் இது எழுப்பப்பட்டது.
ஏழு அடுக்குகள் கொண்ட இந்த அமைப்பானது, 64 மீ., நீளமும், 20 மீ., அகலமும், 28 மீ., ஆழமும் கொண்ட இந்த கிணறு கைவினைத்திறன் மற்றும் இந்தியக் கட்டடக்கலைக்கு உதாரணமாக உள்ளது.
அரசக்குடும்பத்தினர் போர்க்காலங்களில் தப்பிச் செல்லும் வகையில், கடைசிப் படிக்கட்டுக்குக் கீழே 30 கி.மீ., நீளமுள்ள சுரங்கப் பாதை சித்பூருக்குச் செல்கிறது.
தண்ணீரின் புனிதத்தன்மையை உணர்த்தும் வகையில், இந்த ராணி கி வாவ் அல்லது படிக்கட்டுக் கிணறு, ஒரு தலைகீழ் கோவிலாக கீழ் நோக்கி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிணற்றின் பக்கவாட்டு சுவர்களில் விஷ்ணுவின் தசாவதாரங்கள், புத்தர், திருபாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள் உட்பட 800க்கும் மேற்பட்ட அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
தூண்களிலும் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. கிணற்றுக்குச் செல்லும் படிக்கட்டுகள் நேராக இல்லாமல் பக்கவாட்டில் ஏறி, இறங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்குள்ள ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, ராணி கி வாவ் தண்ணீரில் மூழ்கியதால் நீண்ட காலமாக படிக்கிணறு குறித்து மக்களுக்கு தெரியாலேயே போய்விட்டது.
கடந்த 1960ம் ஆண்டு தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, சுற்றுலாவாசிகளின் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. இந்திய அரசின் புதிய ஊதா நிற 100 ரூபாய் நோட்டில், படிக்கிணறு ஓவியம் இடம்பெற்றுள்ளது.
விஞ்ஞான வளர்ச்சி இல்லாத அந்த காலகட்டத்திலேயே, உலகுக்கே சவால் விடும் வகையில் கட்டடக்கலை சிறப்பை பறைசாற்றும், இந்த ராணியின் படிக்கிணறு அனைவருக்கும் ஒரு பொக்கிஷமே.