இரவில் உறக்கமின்றி தவிக்கும் முதியோருக்கு டிப்ஸ்

வயது மூப்பு காரணமாக, மெலட்டோனின் ஹார்மோன் குறைவாக சுரக்கும். இதனால் சிலருக்கு, ஆழ்ந்த துாக்கம் இருக்காது. சிலருக்கு அடிக்கடி துாக்கத்தில் எழுவது போன்ற தொந்தரவு இருக்கும்.

இதற்கு உடலில் வலி இருத்தல், மூச்சிரைப்பு, ஆஸ்துமா, நீரிழிவு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பும் காரணம். பக்கவாதம், பார்கின்சன் இருந்தாலும் துாக்கம் பாதிக்கும்.

சிலருக்கு உடலில் சோடியம் குறைதல், வயிறு தொந்தரவு, காய்ச்சல் இருந்தாலும், துாக்கம் பாதிக்கப்படும். .

நோய் சார்ந்த பாதிப்புகளால் துாக்கம் தடைப்பட்டால், அதற்குரிய சிகிச்சை எடுத்து கொண்டால் நன்றாக துாங்குவர் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

துாக்க நேர அட்டவணை குறித்த குறிப்புகள் எடுத்து கொள்வது அவசியம்.

அப்போது தான் எந்த நேரத்தில் துாக்கம் தடைபடுகிறது, அதற்கு முன்பு நடந்த விஷயங்கள் என்ன என, ஆராய்ந்து துாக்க பாதிப்புக்கு தீர்வு காண முடியும்.

சிலர் பகலில் அதிக நேரம் துாங்கிவிடுவர். இதனால், இரவில் துாக்கம் வராது. அதனால் பகலில் தூங்குவதை குறைக்க வேண்டும்.

படுக்கையறையில் குறைந்த வெளிச்சம் தரும் பல்பு மாட்டுவது உதவலாம். போன் பயன்படுத்துவது, டீ, காபி, சிகரெட், மது தவிர்க்க வேண்டும்.

டாக்டர் பரிந்துரைப்படி, துாக்க மாத்திரைகளும் சிறிது நாட்களுக்கு எடுத்து கொள்ளலாம். பகலில் யோகா, எளிய நடைப்பயிற்சி ஆழ்ந்த துாக்கத்திற்கு கைக்கொடுக்கும்.