டிஜிட்டல் அம்னீஷியாவை சமாளிக்க... அளவோடு பழகுவோம் !
டிஜிட்டல் சாதனங்களை நம்பி தொலைபேசி எண்கள், பாஸ்வேர்ட், பின் எண், அக்கவுண்ட் நம்பர் என அனைத்தையும் செல்போனில் பலரும் சேமித்து வைப்பர்.
மொபைல் போன் தொலைந்துவிட்டால் எந்த எண்ணும் பலருக்கும் நினைவில் இருக்காது. அதேபோல் சிறு சிறு கணக்குகளுக்கும் தொழில்நுட்ப கருவியையே தேடுகிறோம்.
தொழில்நுட்பத்திற்கும், ஸ்மார்ட்போனிற்கும் அடிமையாதல் என்பது மூளையில் உருவாகும் புதிய நினைவுகளுக்கான திறனை குறைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மூளையில் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்களை டிஜிட்டல் சாதனத்தில் பதிவு செய்துவிட்டு, அதை நம்பியே இருப்பது 'டிஜிட்டல் அம்னீஷியா'விற்கு வழிவகுக்கிறது.
பள்ளி மாணவர்களிடமும் இது பரவுவது அதிர்ச்சி அளிப்பதாகும். செல்போன்களின் அதிக பயன்பாடு மன அழுத்தம், மறதி அல்லது நினைவாற்றலை பாதிக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள்.
கண்களும், தூக்கமும் பாதிப்படைவதால் மூளையில் உள்ள செல்கள் சேதமடைவதாகவும், அதிக டிஜிட்டல் பயன்பாடு ஒருவரின் 'ஐக்யூ'வை கணிசமாகக் குறைக்கிறது எனவும் ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.
எனவே, உறங்குவதற்கு குறைந்தது 1 மணி நேரத்திற்கு முன்பே டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும். வாரத்திற்கு 1 நாள் இவற்றை பயன்படுத்தாமலிருக்க வேண்டும்.
விடுமுறை நாட்களில் உடற்பயிற்சி, யோகா, வெளி விளையாட்டுகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதுடன், டிஜிட்டல் சாதனங்களின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
உணவுக்கான டயட் போன்று, டிஜிட்டல் பயன்பாட்டிற்கும் ஒரு சார்ட்டை உருவாக்கி, எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்ற வரையரையை வகுக்க வேண்டும்.
அன்றாட பணிகள், அத்தியாவசிய அலைபேசி எண்கள், முக்கிய தினங்கள் உள்ளிட்ட முக்கியமான தகவல்களை குழந்தைகளை மனப்பாடம் செய்து கொள்ள பயிற்சியளிக்க வேண்டும்.