இந்த அக்டோபரில் கேரளாவில் சுற்றிப் பார்க்க ஏற்ற 3 இடங்கள்!

பருவமழை முடிந்து கேரளா எழில்கோலம் பூண்டுள்ளது. மிதமான வெயில், ஈரச்சாலைகள், குளிர்ச்சியான பசுமைக் காட்சிகள் என கடவுளின் தேசம் மரகதமாக மின்னும் காலம் இந்த அக்டோபர்.

குளிர்காலம் தொடங்கும் அக்டோபர் மாதத்தில் கேரளாவில் சுற்றிப் பார்க்க வேண்டிய சில சிறந்த இடங்களின் விவரங்கள் உங்களுக்காக...

பேக்வாட்டர் எனப்படும் உப்பங்கழியில் உள்ள வேம்பநாடு ஏரியில் குமரகத்தில் பாரம்பரிய படகு இல்லம் மூலம் சுற்றி வரலாம்.

சலசலக்கும் நீர் சத்தமும், சுற்றிலும் பறவைகளின் இசை சத்தமும், தண்ணீரை தொட முயற்சிக்கும் பசுமையான மரக்கிளைகளும் நந்தவனத்தில் சென்று கொண்டிருப்பது போன்ற உணர்வை தரும்.

பாதிராமணல் தீவு என்பது உப்பங்கழியின் நடுவில் பச்சைப் பட்டு விரித்தது போல் அமைந்துள்ள ஒரு சிறிய திட்டு. படகு மூலம் இங்கு செல்லலாம். ஆள் அரவமின்றி அமானுஷ்யமாக இருக்கும்.

மின்னும் கடற்கரை மற்றும் பரபரப்பான அஷ்டமுடி ஏரி ஆகியவற்றை உள்ளடக்கிய கொல்லம் ரோமானியர்கள் காலத்திலிருந்தே வர்த்தக மையமாகவும் பிரபலமானதாகவும் இருந்தது.

கொல்லம் அட்வென்ச்சர் பூங்காவில் படகு சவாரி செய்தபடி நகரை தள்ளி நின்று பார்ப்பது புது அனுபவமாக இருக்கும். ஆழப்புழா வரை கூட படகிலேயே செல்லலாம்.

கொல்லத்தில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் ஜடாயு இயற்கை பூங்கா உள்ளது. இங்கு பிரம்மாண்ட ஜடாயு பறவையின் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

குமரகம் மற்றும் கொல்லம் கடல் பிரியர்களுக்கான ஊர் என்றால், மூணாறு மலை பிரியர்களுக்கான ஊர். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது இந்த மூணாறு.

தேயிலை தோட்டங்கள், தேசியப் பூங்கா, லக்கம் நீர்வீழ்ச்சி, ஆனைமுடி சிகரத்தில் உள்ள வீயூ பாயின்ட், இயற்கை எழில் சூழ்ந்த மட்டுபெட்டி அணை என வசீகரிக்கிறது மூணாறு.