நரம்பு மண்டலத்தை முடக்கி உயிர் குடிக்கும் ஜி.பி.எஸ்., பாதிப்பு

ஜி.பி.எஸ்., எனும் 'கிலன் பா சிண்ட்ரோம்' ஒரு அரியவகை நரம்பியல் கோளாறு. இதில் புற நரம்பு மண்டலம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் தாக்கப்படுகிறது.

உடலின் தசை இயக்கத்தை கட்டுப்படுத்தும் நரம்புகளை பாதிக்கிறது. தொடுதல், வெப்பநிலை, வலி உணர்வுகள் உள்ள நரம்புகளின் செயல்பாட்டை முடக்கி, கால்கள் / கைகளில் உணர்திறன் இழக்கச் செய்கிறது.

இதனால், தசை பலவீனம், சுவாசிப்பதிலும், விழுங்குவதிலும் சிரமம் ஏற்படுகிறது.

இந்நோய்க்கான காரணம் தெளிவாக குறிப்பிடப்படாவிட்டாலும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள், தடுப்பூசி போட்டவர்கள், பெரிய ஆப்ரேஷன் செய்தவர்களுக்கு பாதிப்பு உண்டாகிறது.

பாதிப்பு ஏற்படும்போது, உடலிலுள்ள நோய் எதிர்ப்பு மிகத் தீவிரமாக செயல்படுவதால், அது நரம்பு மண்டலத்தை முடக்குவதாகக் கூறப்படுகிறது.

சுகாதாரமற்ற உணவு, குடிநீர் உட்கொள்வதால் உண்டாகும் பாக்டீரியா தொற்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, கை, கால்களில் திடீர் பலவீனம் ஆகியவை முக்கிய அறிகுறிகள்.

மஹாராஷ்டிராவின் புனேவில், இந்த ஜி.பி.எஸ்., பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது; இதுவரை 101 பேர் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் தொற்று நோய் இல்லை என்பதால், அச்சப்படத் தேவையில்லை என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.