யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற செஞ்சி கோட்டைக்கு ஒரு விசிட் போலாமா?
தமிழகத்தில் செஞ்சியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ சமீபத்தில் அறிவித்துள்ளது.
மூன்று மலைகளை இணைத்து, 1200 ஏக்கர் பரப்பில் 12 கி.மீ., நீள மதில் சுவர்கள், 80 அடி அகலமுள்ள அகழிகளுடன், 800 அடி உயர மலை உச்சியில் கோட்டை கட்டப்பட்டுள்ளது.
கி.பி., 1190ம் ஆண்டு கோணார் வம்சத்தினர் எழுப்பிய செஞ்சி கோட்டையில் குறும்பர்கள், ஒய்ச்சாலர்கள், மொகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் உட்பட பலரும் ஆட்சி செய்தனர்.
சத்ரபதி சிவாஜி ஆட்சியில் முக்கிய ராணுவ கேந்திரமாக விளங்கிய செஞ்சி உட்பட 12 கோட்டைகளை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டுமென, கடந்தாண்டு மத்திய அரசு பரிந்துரைத்தது.
இந்நிலையில், யுனெஸ்கோ தலைமையகம் தற்போது செஞ்சி கோட்டை உட்பட, 12 கோட்டைகளை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மாமல்லபுரம் சிற்பங்கள், தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோவில், ஊட்டி மலை ரயில் ஆகியவை உலக பாரம்பரிய சின்னங்களாக உள்ளன.
இப்பட்டியலில் தற்போது செஞ்சி கோட்டை, 6வதாக இடம் பெற்றுள்ளது; எனவே, இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வானுயர்ந்த மலைக்கோட்டை, கலை நயம் மிக்க கற்கோவில்கள், அற்புத நெற்களஞ்சியங்கள், ஆழமான அகழி என எழில்மிகு ஓவியமாய் வியக்க வைக்கிறது இக்கோட்டை.