கட்டுக்கடங்கா கோபத்தை இப்படியும் கட்டுப்படுத்தலாம்

எந்த விஷயத்தையும் பேசுவதற்கு முன் ஒருசில விநாடிகள் சிந்தித்து பிறகு பேசுவது நல்லது. இந்த சில விநாடி கால இடைவெளி கோபத்தைத் தடுக்க உதவும்.

மற்றவர் மனதை புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்த்து, உங்கள் தரப்பு நியாயத்தை மட்டும் முன் வையுங்கள். இது திடீர் கோபத்தைக் குறைத்து ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும்.

உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வது ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். எனவே, தினசரி உடற்பயிற்சியும் கோபத்தைக் குறைக்க சிறந்த மருந்தாக அமைகிறது.

கோபம் ஏற்படுத்தும் சூழலில் இருந்து சில நிமிடங்கள் விலகி இருந்தால் கோபம் குறைந்து மூளை சிந்தனையை அதிகரிக்கும். எனவே, அவ்வப்போது வெளியே சென்று நடை பயில்வது நல்லது.

ஒருவர் மீது நீண்டநாள் விரோதத்தை வளர்க்கும்போது உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படும். தேவையற்றதை மறப்பது நல்லது. நாளடைவில் மறதியே ஓர் மாமருந்தாக அமையும் என்பதை உணரலாம்.

மனதுக்கு நெருக்கமானவர்களிடம் அவ்வப்போது வாழ்க்கைப் பிரச்னைகள் குறித்து ஆலோசனை செய்வது நல்லது. இதனால், உங்களின் கோபம் படிப்படியாகக் குறையும்.

தகாத வார்த்தைகளை சிந்திவிட்டால் அது எப்பேர்ப்பட்ட இழப்பை ஏற்படுத்தும் என்பதை அவ்வப்போது சிந்தித்து கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.