ஊகிக்க முடியாத நோய் தொற்றுகள்! தடுக்க டிப்ஸ்...

குளிர்காலம் வந்தால், சளி, இருமல் பாதிப்பு ஏற்படும். கோடைக் காலத்தில், தோல் நோய்கள், ஒவ்வாமை பாதிப்பு வரலாம். பருவமழை காலத்தில், பெரும்பாலும் வைரஸ் காய்ச்சல்கள் வரும்.

அதீத வெப்பம், எதிர்பாராத நேரத்தில் மழை, ஏற்ற இறக்கமான குளிர், காற்று என்று நம்மால் ஊகிக்க முடியாதபடி வானிலை மாற்றங்கள் நிகழ்கின்றன.

இந்த மாற்றங்களால், எத்தனை முறை வைரஸ் தொற்று ஏற்படும், சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதையும் கணிக்க முடிவதில்லை என டாக்டர்கள் கூறுகின்றனர்.

கணிக்க முடியாத வானிலை, காற்று மாசு ஆகிய இரண்டு காரணிகளும் சேர்ந்து, சுவாச மண்டலத்தை பலவீனமாக்கி, எளிதாக தொற்று நோய்கள் ஏற்பட வழி செய்கின்றன.

பலருக்கும், தும்மல், இருமல், காய்ச்சல், சோர்வு, மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிவது, தொண்டை வலி, தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.

சிலருக்கு, ஒரே நேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் வரலாம். இவை, ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது என்பதால், சளி, ஒவ்வாமை, புளூ காய்ச்சல் என்பதைக் கண்டறிவது கடினம்.

ஆனாலும், இவற்றுக்கிடையிலான வேறுபாட்டை அறிந்து கொள்வது முக்கியம்; குறிப்பாக புளூ தொற்றுக்கு, சரியான நேரத்தில் சிகிச்சை செய்யாவிட்டால், தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், செப்டம்பரில், தடுப்பூசி போட்டுக் கொண்டால், புளூ காய்ச்சலின் தீவிர பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தினசரி உடற்பயிற்சி, ஆழ்ந்த துாக்கம் ஆகியவை, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.

வைட்டமின் சி, டி, துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்திக்கு இயற்கையான பாதுகாப்பை தரும்.