பெண்களுக்கு கோடையில் ஏற்படும் சிறுநீர் தொற்று!
இயற்கையிலேயே, பெண்களின், 'யூரினரி டிராக்' எனப்படும், சிறுநீர் பாதை, ஆண்களை ஒப்பிடும் போது, அளவில் குறுகலாக, நீளம் குறைவாக இருக்கும்.
இதனால், அதிக நேரம் சிறுநீரை கட்டுப்படுத்தி வைக்க முடியாது. இதற்கு பயந்தே, நிறைய பெண்கள், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை.
அப்படி செய்வதால், சிறுநீர் பாதையில் இருக்கும் தசைகள், சரியாக செயல்படாமல் இருக்கும்.
குறைந்த அளவு தண்ணீர் குடிக்கும் போது, சிறுநீர் வெளியேறாமல், அப்படியே தேங்கி நிற்கும்; விளைவு, சிறுநீர்ப் பாதையில், கிருமி தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
அதனால் தான் கோடை காலத்தில் சிறுநீர் தொற்று பிரச்னையால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
கோடை காலத்தில், வியர்வையாக பெருமளவு நீர் வெளியேறும்; எனவே, குறைந்தது, மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.
சுய சுகாதாரத்தில், மிக கவனமாக இருப்பது அவசியம். இதற்கென இருக்கும், திரவ சோப்புகளை பயன்படுத்தி, மூன்று வேளையும் சுத்தப்படுத்த வேண்டியது முக்கியம்.
முடிந்தவரை, பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். உள்ளாடைகள் கண்டிப்பாக பருத்தியால் ஆனதாக இருக்க வேண்டும்.
இந்த விஷயங்களை கடைபிடித்தும், வலி, எரிச்சல் இருந்தால், தாமதிக்காமல் டாக்டரின் ஆலோசனயை பெற வேண்டும்.