விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... தேங்காய்ப்பூரண கொழுக்கட்டை!

தேவையானப் பொருட்கள்: பச்சரிசி மாவு, தேங்காய்த் துருவல் - தலா 1 கப், தண்ணீர் - 2 கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன், வெல்லம் - 0.75 கப், ஏலக்காய்த்துாள் - 0.5 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

கடாயில் தண்ணீர், உப்பு, சிறிது நெய் விட்டு, அடுப்பில் வைக்கவும். கொதி வந்தவுடன், தணலை குறைத்து, பச்சரிசி மாவை சேர்த்து கட்டி தட்டாமல் கிளறி மூடி வைக்கவும்.

இரண்டு நிமிடம் கழித்து, நன்றாக கிளறி, மாவு கெட்டியானவுடன் அடுப்பை அணைத்து, கடாயை மூடி வைக்கவும்.

மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு சூடானவுடன், தேங்காய்த்துருவல், பொடித்த வெல்லம் சேர்த்து கிளறவும்.

எல்லாம் சேர்ந்து வரும் போது ஏலக்காயத்துாள் போட்டுக் கலந்து இறக்கி வைக்கவும். இது தான் தேங்காய்ப் பூரணம்.

வேக வைத்த மாவை கட்டி இல்லாமல் பிசைந்து, அதிலிருந்து ஒரு உருண்டை எடுத்து, எண்ணெய் தொட்டு, கை விரல்களால் அழுத்தி சிறு கிண்ணம் போல் செய்யவும்.

நடுவில் தேங்காய் பூரணம் கொஞ்சம் வைத்து மூடி, வேண்டிய வடிவத்தில் கொழுக்கட்டையாக செய்யவும்.

பின், அவற்றை இட்லி தட்டில் வைத்து, 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்தெடுத்தால், விநாயகருக்கு படைக்க சுவையான தேங்காய்ப்பூரண கொழுக்கட்டை ரெடி.