நம்மிடமே இருக்கு மருந்து... மிளகு !
உலகளவில் மிளகு உற்பத்தியில் இந்தியா, நான்காம் இடத்தில் இருந்தாலும், காரம், மணம், குணத்தில் முதலில் நிற்பது, இந்திய மிளகு தான்.
இதில், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், தையமின், ரிபோபிளேவின், நியாசின் முதலிய தாதுப்பொருட்களும், உயிர்ச்சத்துக்களும் உள்ளன.
நெஞ்சுச்சளி, நுரையீரல், செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்கிறது. சுவாசக் குழாயில் இருக்கும் அடைப்பை நீக்கி, சைனஸ், மூக்கடைப்பு பிரச்னைகளுக்குதீர்வாகிறது.
புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. இதிலுள்ள செலினியம், குர்குமின், பீட்டா கரோட்டின், வைட்டமின் 'பி' போன்றவை, குடல் பகுதிகளில் உள்ள அசுத்தங்களை நீக்குகிறது.
இதிலுள்ள, 'பெப்பரைன்' மூளையின் அறிவாற்றல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. ரத்தக் கொதிப்பை சீரான அளவில் வைத்திருக்க உதவுகிறது.
மிளகை கடித்துச் சாப்பிட்டால் பல் ஈறுகளுக்கு பலம் கிடைக்கும். மிளகுடன் உப்புச் சேர்த்து பல் துலக்கினால், பல் வலி, சொத்தை பல், ஈறு வலி, ஈறுகளிலிருந்து ரத்தம் வடிதல் குணமாகும்; வாய் துர்நாற்றத்தை போக்கும்.
மிளகிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு குணம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தினமும் மிளகு ரசம் சாப்பிட, வயிற்று உபாதைகள், சுவாச நோய்கள் வராமல் இருக்கும். மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.
சளியால் ஏற்படும் இருமலுக்கு மிளகு நீரில், பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம். மிளகை நெய்யில் வறுத்து பொடித்து, அதை தினம் மூன்று வேளை அரை டீஸ்பூன் சாப்பிட சளித்தொல்லை குணமாகும்.
மிளகு, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா சேர்த்து அரைத்த விழுதை சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டால், செரிமான கோளாறு நீங்கும்.